தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..
இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் போது, அதனை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் விவரித்துள்ளார். மசோதாவை அறிமுகம் செய்யும்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காங்கிரஸின் 98, சமாஜ்வாடியின் 37, திரிணாமுல் காங்கிரஸின் 28 மற்றும் திமுகவின் 22 எம்பிக்கள் அடங்குவர்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ‘தொகுதி மறுவரையறை‘ (Delimitation) மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு வாக்கெடுப்பு நடத்தியது. இதில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மசோதாவை அறிமுகம் செய்ய ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சூழலில், மசோதாவை முழுமையாக முறியடிப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
இதையும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!
கூட்டணி ஒருங்கிணைப்பு:
தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சமீபகாலமாக ஒருவிதமான ‘கசப்புணர்வு’ நிலவி வந்தது. ராகுல் காந்தி தமிழகத்திற்குத் தேர்தல் பிரசாரத்திற்கு வருவது தாமதமானதும், இரு தலைவர்களும் நீண்ட நாட்களாகப் பேசாமல் இருந்ததும் அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆனால், தற்போது மசோதா விவகாரத்தில் முதலமைச்சரே ராகுல் காந்தியுடன் பேசியிருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் இணக்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வியூகம்:
இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் போது, அதனை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் விவரித்துள்ளார். மசோதாவை அறிமுகம் செய்யும்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் 185 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காங்கிரஸின் 98, சமாஜ்வாடியின் 37, திரிணாமுல் காங்கிரஸின் 28 மற்றும் திமுகவின் 22 எம்பிக்கள் அடங்குவர்.
இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
டி.ஆர். பாலுவின் நகர்வு:
நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ராகுல் காந்திக்கு அருகிலேயே அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டது, இந்தியா (INDIA) கூட்டணியின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை’ மசோதா தாக்கல்.. தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா என்பது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சி என்று திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் – ராகுல் காந்தி இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை, நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.