தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. முதலமைச்சரிடம் இருந்து செல்லும் கோரிக்கை மனு!

ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகை தரும் மோடி, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய இடங்களை பார்வையிட உள்ளார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்தபடியே பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இதனை பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. முதலமைச்சரிடம் இருந்து செல்லும் கோரிக்கை மனு!

முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமர் மோடி

Updated On: 

26 Jul 2025 13:03 PM

சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் அளிப்பதற்காக கோரிக்கை மனுவை கொடுத்தனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில் மருத்துவமனையில் நான் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் மூலம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 26, ஜூலை 27 ஆகிய இரு தினங்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அதன்படி இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதேசமயம் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தை அவர் திறந்து வைத்து பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ

தொடர்ந்து இரவு அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவருக்கு உற்சாக வரவேற்பு மாவட்ட பாஜக சார்பில் அளிக்கப்படவுள்ளது. இன்றிரவு திருச்சியில் தங்கும் அவர், நாளை ராஜேந்திர சோழனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு சென்று வழிபடவுள்ளார். அதன்பிறகு மதியம் திருச்சியில் இருந்து மீண்டும் டெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக பாஜக நிர்வாகிகள்,  கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோரையும் பிரதமர் சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Also Read: Narendra Modi : அரசின் திட்டங்களில் தாமதம் கூடாது.. தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை

உடல் நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். கடந்த ஜூலை 21ஆம் தேதி காலை நடைபயணம் மேற்கொண்ட அவருக்கு லேசான தலைசுற்றல் இருந்த நிலையில், வழக்கம் போல அன்றைய பணிகளை தொடங்கினார். பின்னர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் அட்மிட் ஆக வேண்டும் என அறிவுறுத்தினர்.

Also Read: MK Stalin: முதலமைச்சர் எப்படி இருக்கிறார்? – துரைமுருகன் கொடுத்த தகவல்!

பின்னர் தொடர் பயணங்கள், நிகழ்ச்சிகள் என ஓய்வின்றி இருப்பதால் தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறி மூன்று தினங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் முதலமைச்சரை அறிவுறுத்தினர். இப்படியான நிலையில்தான் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வித பரிசோதனைகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.