சென்னை டூ புதுச்சேரிக்கு கப்பல் போக்குவரத்து.. அலைகளுக்கு மத்தியில் அலாதியான பயணம்.. தமிழக அரசின் அசத்தல் திட்டம்!
Chennai To Pondicherry Ferry Service : சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி மாநிலத்துக்கு பயணிகள் படகு சேவை தொடங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விருப்பமான கப்பல் நிறுவனங்களிடம் இருந்து விருப்பங்களை தமிழக அரசு கோரி உள்ளது .
தமிழகத்தில் சுற்றுலா துறையை சர்வதேச அளவுக்கு மேம்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மாநிலத்திற்கு படகு போக்குவரத்து சேவையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. சாலை பயணங்களில் பயணிகள் மேற்கொள்ளும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், சுற்றுலா பயணிகள் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான கடல் வழி பயணத்தை அனுபவிப்பதற்கும் இந்த திட்டம் பெரிய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடல் வழி புதிய பயணத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்ட பணியாக படகு போக்குவரத்து சேவையை இயக்குவதில் ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விருப்ப கோரிக்கைகளை வரவேற்கும் கடல்சார் வாரியம்
இதில் கடல்சார் வாரியம் விருப்ப கோரிக்கைகளை வரவேற்றுள்ளது. இதில், தகுதி வாய்ந்த படகு உரிமையாளர்கள், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் இதில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஒப்பந்த புள்ளிகளுக்கான இணையதளமான tntenders.gov.in- இல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு டிசம்பர் 1- ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க: ரூ.5 கோடி பேரம் பேசிய விவகாரம்.. சிக்குகிறாரா அமைச்சர் ராஜ்மோகன்? லஞ்ச ஒழிப்பு துறையில் பரபர புகார்!




மாமல்லபுரம்- புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்காக . . .
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு சாலை வழியாக செல்வதில் உள்ள நீண்ட நேர பயணத்துக்கு மாற்றாக இந்த கடல் வழி போக்குவரத்து அமைய உள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க புராதன சிற்பங்கள் மற்றும் கடற்கரை கோயில்களை தரிசனம் செய்துவிட்டு எளிதில் புதுச்சேரி மாநிலத்தை சென்றடைய முடியும். மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா சார்ந்த உள்ளூர் தொழில்களும் கூடுதல் வளர்ச்சியே பெறும்.
பொதுமக்கள்- சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
சென்னை டூ புதுச்சேரி கடல் சார் பயணத்துக்கு விருப்ப கோரிக்கைகள் பெறப்பட்ட பிறகு தகுதியான நிறுவனங்களை அரசு தேர்வு செய்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்த்து, மத்திய மாநில அரசுகளின் அனுமதிகளை பெறுதல் போன்ற அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இருப்பினும், பயண கட்டணம், பயண நேரம், படகுகள் இயக்கப்படும் நேரம், படகுகள் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த முழுமையான விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த திட்டமானது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தீபாவளி நேர பணப்புழக்கம்.. தமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை!