AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து! என்ன காரணம்?

1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்படாமலேயே கடந்த ஆண்டு டெண்டர் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிர்வாகக் காரணங்களால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நிர்வாக அனுமதி பெற்று, புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து! என்ன காரணம்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Oct 2026 07:07 AM IST

அக்டோபர் 15, 2026: சென்னையில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1000 மின்சார குளிர்சாதன பேருந்து கொள்முதல் செய்ய டெண்டர்:

சென்னையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் மாநகரப் பேருந்துகளை நம்பிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் வசதிக்காகக் குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. இந்தப் பேருந்துகள் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.

மேலும் படிக்க: இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

தனியார் பங்களிப்புடன் கூடிய மொத்தச் செலவு ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால், டெண்டர் திறக்கும் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

220 சிறிய பேருந்துகள் திட்டத்திலும் பின்னடைவு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்லவும், அங்கிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்ல இணைப்புப் போக்குவரத்து வசதியை வழங்கவும் 220 சிறிய வகை ஏசி மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டிருந்தது.

இதன்படி, 7 மீட்டர் நீளமுள்ள 70 பேருந்துகளும், 5 மீட்டர் நீளமுள்ள 150 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்திற்கான டெண்டரில் எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. இதனால், சிறிய ஏசி மின்சாரப் பேருந்துகள் சேவையைச் செயல்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோவையில் தடுப்பூசி செலுத்திய 10 மாதக் குழந்தை உயிரிழப்பு! மருத்துவர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்ட டெண்டர்:

1,000 ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான நிர்வாக ஒப்புதல் பெறப்படாமலேயே கடந்த ஆண்டு டெண்டர் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நிர்வாகக் காரணங்களால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நிர்வாக அனுமதி பெற்று, அரசாணை வெளியிட்டு, புதிய ஏசி மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us