இரவில் குளிர், பகலில் வெயில்.. வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும்? வானிலை நிலவரம் என்ன?
Tamil Nadu Weather Update: வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. எனவே, வரக்கூடிய நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம், பிப்ரவரி 6, 2026: தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்துள்ள சூழலில், பல பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 33.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:
அதனைத் தொடர்ந்து வேலூரில் 33.3 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 32.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் 32 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரியில் 32.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 31.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 30.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலை வரக்கூடிய நாட்களிலும் மாற்றமின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நெருங்கும் 2026 சட்டமனற தேர்தல்.. த.வெ.க உடன் கைக்கோர்க்கும் சசிகலா?
குறைந்தபட்ச வெப்பநிலை சில இடங்களில் 16 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பதிவாகியுள்ளது. குறிப்பாக, திருத்தணியில் 16.5 டிகிரி செல்சியஸும், கொடைக்கானலில் 7.7 டிகிரி செல்சியஸும் குறைந்த அளவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான் இருக்கும்:
இதற்கிடையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. எனவே, வரக்கூடிய நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிருடன் தொடரும் பனிமூட்டம்:
அந்த வகையில், பிப்ரவரி 6, 2026 தேதியான இன்று முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். அதே சமயத்தில், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை வெப்பநிலை குறைந்த நிலையில் காணப்படும். பனிமூட்டம் இல்லாவிட்டாலும், கடும் குளிர் நிலவி வருகிறது.
மேலும் படிக்க: காகம் இறந்து கிடந்த விவகாரம்…சென்னையில் பறவை காய்ச்சல் பரவல்..கால்நடைத்துறை எச்சரிக்கை!
அதிகபட்ச வெப்பநிலை வரக்கூடிய நாட்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால் மழைக்கான வாய்ப்பு இல்லை. எனவே, அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.