வானிலை நிலவரம், மார்ச் 29, 2026: சுமார் 0.9 கிமீ உயரத்தில், வட ஒடிசா முதல் தென் தமிழ்நாடு வரை, தெலுங்கானா மற்றும் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 29ஆம் தேதி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:
மார்ச் 30ஆம் தேதி நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 31ஆம் தேதியும் இதே நிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக தேர்தல் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்!!
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை எப்படி இருக்கும்?
அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலையின் தாக்கம் சற்றே குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுகவில் 60 புது முகங்களுக்கு வாய்ப்பு.. 3 அமைச்சர்களுக்கு ‘சீட்’ இல்லை.. முழு விவரம்!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°C அருகிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் 40°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்:
- வேலூர், ஈரோடு – 39.8°C
- திருச்சி – 38.5°C
- திருப்பத்தூர் – 38.1°C
- சேலம் – 37.2°C
- மதுரை – 39°C
- கரூர் (பரமத்தி) – 39.5°C
சென்னையில்:
- மீனம்பாக்கம் – 36.0°C
- நுங்கம்பாக்கம் – 34.3°C
40°C வரை பதிவாகும் வெப்பநிலை, வரவிருக்கும் நாட்களில் 2–3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை நிலவுவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக கவனத்துடன் வெளியே செல்ல வேண்டும். அவசியமான நேரங்களில் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.