இனி 5 நிமிடம் தான்.. தி.நகர் இரும்பு மேம்பாலம் திறப்பு.. சென்னை மக்கள் ஹேப்பி!
Chennai First Steel Flyover In T Nagar : சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடியில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 30 : சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ரூ.165 கோடியில் கட்டப்பட்டுள்ள இரும்பு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த மேம்பாலம் தி.நகரில் நிலவும் போக்குவரத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் ஜெ.அன்பழகன் மேம்பாலத்தை பயன்படுத்தும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் முக்கிய இடமான தி.நகரில் இரும்பு பாலம் அமைக்கும் பணிகள் 2023ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பாலம் ரூ.165 கோடி செலவில் 1.2 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 53 தூண்கள் உள்ளன. இந்த மேம்பாலத்திற்காக 4,000 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம், தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து சிஐடி நகர் 1வது மெயின் ரோடு வரை உள்ளது. இந்த மேம்பாலம் மூன்று சந்திப்புகளை இணைக்கிறது. தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை, மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை, சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைக்கிறது.




Also Read : கரூர் சம்பவத்தில் பொய் செய்தி.. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது!
தி.நகர் இரும்பு மேம்பாலம் திறப்பு
An informative video about the T Nagar Bridge @chennaicorp pic.twitter.com/R4OlrAkuf2
— Kumaragurubaran (KGB) (@kgbias) September 29, 2025
இந்த பாலம் நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணா நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் வரும் வாகனங்களின் பயண நேரத்தை வெகுமாக குறைக்கும். புதிய மேம்பாலம் 1.2 கி.மீ நீளத்திலும், 8.40 மீட்டர் அகலத்திலும் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலம் மீது செல்லும் வாகனங்களின் மீது அதிர்வுகளைத் தாங்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
Also Read : கலவரத்தை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவு.. சில நிமிடங்களில் டெலிட்.. கொதித்தெழுந்த திமுக!
இந்த பாலம் 2024 டிசம்பர் மாதமே முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மழை போன்ற காரணங்களால் மேம்பால பணிகள் தாமதமானது. இந்த நிலையில், தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 30) திறந்து வைத்துள்ளார். இதன் மூலம், சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் சாலையை அடைய வெறும் 2 முதல் 3 நிமிடங்களே ஆகும். மேலும், மவுண்ட் ரோட்டில் இருந்து தி.நகருக்கும் 5 நிமிடமே ஆகும். தற்போது இந்த சாலையை கடக்க 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இந்த பாலம் 50 ஆண்டுகள் ஆயுளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.