கலவரத்தை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவு.. சில நிமிடங்களில் டெலிட்.. கொதித்தெழுந்த திமுக!
Aadhav Arjuna Tweet : கரூர் விவகாரம் தொடர்பாக தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, இளைஞர்களை கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில், அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, செப்டம்பர் 30 : கலவரத்தை தூண்டும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதனை அடுத்து, அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா சில நிமிடங்களில் நீக்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். அந்த வகையில், 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர். இதனால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, ஒருவர் மீது ஒருவர் விழுந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு திமுக தான் காரணம் ஒரு தரப்பினரும், தவெக தான் காரணம் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல்குமார் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை), 110 (குற்றமற்ற கொலை செய்ய முயற்சி), 125 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்), மற்றும் 223 (ஆணைக்கு கீழ்ப்படியாமல் இருத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?




கலவரத்தை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைதாகி உள்ளனர். மேலும், பொதுச் செயலாளர் ஆனந்தை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில், தவெக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது, “சாலையில் நடந்து சென்றால் தடியடி. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் கைது.
இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், GEN Z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சி தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரசு பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப் போகிறது.
Also Read : கரூர் சம்பவம் – பாஜக சார்பில் 8 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு – யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என பதிவிட்டார். கலவரத்தை தூண்டும் வகையில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், கலவரத்தை கிளப்பும் ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், இதற்கு திமுகவினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.