சென்னை ஏர்போர்ட்டில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய நடிகர்!
சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைனுடன் பாலிவுட் துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வந்தவரிடம் இருந்து ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோகைன், அதிகாரிகளால் கண்டறியப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை, அக்டோபர் 1: சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் வகையிலான போதைப்பொருளுடன் பாலிவுட் துணை நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.35 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் செயல்படும் சர்வதேச விமான நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாடு விமானங்கள் இயக்கப்பட்டும், வருகை தந்தும் வருகின்றன. தினசரி லட்சக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் எப்போதும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் கடுமையாக இருக்கும். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே ஒப்படைக்கபடும். இப்படி கடுமையான விதிகள் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள், அரிய வகை உயிரினங்கள், ஆபரணங்கள் என கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
Also Read: ரூ.60 கோடியில் போதை மிட்டாய்.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய 2 பேர்!




இப்படியான நிலையில் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவரின் சூட்கேஸ் டிராலியின் அடிப்பகுதியில் இருந்த ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளைப் பொடி நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அந்த பாக்கெட்டை சோதனை செய்த போது அது கொகைன் போதைப்பொருள் என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனடியாக அந்த நபரை தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். அதில் அந்த இளைஞர் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் உள்ளிட்ட சில பாலிவுட் படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் தான் கம்போடியா சென்ற நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய போது தெரியாத நபர்கள் சிலர் தன்னிடம் இந்த டிராலியை ஒப்படைத்ததாகவும் , அதை சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து அந்த துணை நடிகர் இதற்கு முன் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்பதைக் கண்டறிய சுங்க அதிகாரிகள் தற்போது அவரது பயண வரலாற்றை ஆய்வு செய்து வருகின்றனர். அதேசமயம் இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள பெரிய வலையமைப்பு பற்றியும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
துணை நடிகர் வாக்குமூலம் ஒருபுறம் இருந்தாலும், அவர் போதைப்பொருட்களை மும்பை அல்லது டெல்லி போன்ற மாநிலங்களில் போதைப்பொருள் நெட்வொர்க் செயல்படும் நகரங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டாரா எனவும் அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.
இப்படியாக கோடிக்கணக்கில் போதைப்பொருள் பிடிபடுவது கடந்த இரண்டு வாரங்களில் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது சம்பவமாகும். செப்டம்பர் மாத தொடக்கத்தில், சென்னை சுங்கத்துறையினர் ஃபெர்ரெரோ ரோச்சர் சாக்லேட் கேன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.6 கிலோ கோகோயினை பறிமுதல் செய்தனர், இதன் மூலம் எத்தியோப்பியாவிலிருந்து வந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.