அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த வீரர் யார்? என்ன பரிசு?
Avaniyapuram Jallikattu 2026 : பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள காரும், வெற்றிபெற்ற காளைக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும் வழங்கப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த பாலமுருகன்
தைப்பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரம் பகுதியில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண உலகெங்கிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 1,000 காளைகளுக்கும் 550 மாடுபிடி வீரர்களுக்கும் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உரிய முறையில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக ஸ்கோர் போர்டு முறையில் வெற்றிபெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டன.
முதலிடத்தை பிடித்த வீரர் யார் ?
மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 10 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 9வது சுற்றில் ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி வளையன்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதனைத் தொடர்ந்து 11வது சுற்று நடைபெற்ற இறுதி சுற்றில் 2 மாடுகளுக்கும் மேல் பிடித்த 32 வீரர்கள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றில் 18 காளைகளை பிடித்த பாலமுருகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : தித்திக்கும் தைப்பொங்கல்.. தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டம்!!
முதல் பரிசு என்ன?
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், சிறந்த காளைக்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாடுபிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 1 என மொத்தம் 32 காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்சிகிச்சைக்காக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 5 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க : அவனியாபுரத்தில் அனல்பறக்கும் ஜல்லிகட்டு.. அதிரடி காட்டும் காளைகள்.. முன்னிலை நிலவரம்!!
போட்டியின் போது காயமடைவோரை உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 15 படுக்கைகளுடன் கூடிய முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 மருத்துவர்கள் 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் போட்டியின் போது 2200 காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.