தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்தியா நிறுவனம்…சென்னை-துபாய் விமான சேவை நிறுத்தம்…என்ன காரணம்?
Air India Flight Services: சென்னை -துபாய் இடையே ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையை நிறுத்தி உள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் தமிழகத்தில் இருந்து முற்றிலும் விலக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விமான போக்குவரத்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்திய நிறுவனம்
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து உள்ளூர் மட்டும், வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான நிறுவனங்கள் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக, பெங்களூரில் இருந்து துபாய்க்கு அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் நிரந்தரமாக விலக உள்ளது. சென்னை– துபாய் இடையே இந்தியன் ஏர்லைன்ஸ் காலத்தில் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விமான சேவை இருந்து வருகிறது. இந்த சேவையை தற்போது நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் இந்த விமான சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் பல்வேறு சேவைகளை திடீரென நிறுத்தியது. இதில், முதன் முதலாக ஸ்ரீலங்காவுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தமிழர்கள் அதிகம் வசித்து வரும் துபாய் நகருக்கான விமான சேவையை வரும் மார்ச் 29- ஆம் தேதி முதல் ( ஞாயிற்றுக்கிழமை) நிறுத்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 100 நாள் வேலையின்போது கிடைத்த மர்மப் பொருள்: பீரங்கி குண்டா? – மக்கள் அதிர்ச்சி
சென்னை விமான நிலையத்துக்கு முக்கியத்துவம் இல்லை
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டை முழுவதும் புறக்கணித்து வெளியேறுகிறதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் பெரிதளவில் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தமிழகத்திற்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், தனது சேவைகளை முற்றிலும் நிறுத்தி தமிழகத்திலிருந்து வெளியேற திட்டமிடுகிறது.
தமிழக விமான போக்குவரத்தை பின்னுக்கு தள்ளும்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், கொழும்பு ஆகிய நாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவைகளை வழங்கி வந்தது. தற்போது, இந்த சேவைகளில் துபாய் மற்றும் கொழும்பு நாடுகளுக்கான விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்தின் இத்தகைய செயல் தமிழ்நாட்டு விமான போக்குவரத்தை பின்னுக்குத் தள்ளும் செயலாகும். மொத்தத்தில் தமிழகத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கடும் குளிர்.. தர்மபுரியில் 16 டிகிரி வரை குறைந்த வெப்பநிலை.. தமிழகத்தில் தொடரும் பனிமூட்டம்..