தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறை…இப்படியொரு வசதியா..பெரும் வரவேற்பு!
Tambaram Railway Station: தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட கட்டண காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.35 கட்டணமாக செலுத்தி பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அறையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கட்டண காத்திருப்பு அறை
தெற்கு ரயில்வேயில் முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது தாம்பரம் ரயில் நிலையம். இங்கு, தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான ரயில்கள் இங்கிருந்தும், இந்த ரயில் நிலையத்தின் வழியாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சென்னையின் நகரப் பகுதிகளுக்கும் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், 24 மணி நேரமும் தாம்பரம் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். இதற்காக தினம்தோறும் ஏராளமான பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏசி காத்திருப்பு அறை
இதனால், தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய வசதிகள் உள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதில், நீண்ட தொலைவு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கட்டண காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் நவீனமான முறையில் உள் அலங்காரம், சொகுசான சோபா செட்டுகள், சாய்வு இருக்கை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித் தனியான நவீன கழிப்பறை, மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்வதற்கான பிளக் பாயிண்டுகள், இலவச வைஃபை வசதி, சுத்தமான குடிநீர் வசதி மற்றும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கான அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ஒரு பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..
24 மணி நேரமும் செயல்படும் காத்திருப்பு அறை
இந்த கட்டண குளிரூட்டப்பட்ட அறையானது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறையை பயன்படுத்துவதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.35 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அறையில், பயணிகள் ரயிலில் எந்த வகுப்பில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேரடியாக சென்று கட்டணத்தை செலுத்தி அறைய பயன்படுத்தி கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு
தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றவாறு பல்வேறு ரயில்கள் இங்கிருந்தும், இந்த ரயில் நிலையம் வழியாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இங்கு வருகை தரும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பயணிகள் காத்திருப்பு அறை பெரிதளவில் இல்லாமல் இருந்த நிலையில், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!