சென்னைவாசிகளே வந்தது குட் நியூஸ்.. 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!
41 chennai metro stations to become multimodal hubs: பயணிகள் மெட்ரோவிலிருந்து இறங்கியவுடன் தங்களின் அடுத்தகட்ட பயணத்தைத் தொடர்வதில் நிலவும் சிக்கல்களைக் களைய ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கென பிரத்யேகமாக ஆட்கள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் (Pick-up & Drop-off zones) ஒதுக்கப்படும்.
சென்னை, மார்ச் 24: சென்னையில் தினசரி பொது போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் ஒரு போக்குவரத்து வசதியிலிருந்து மற்றொரு வசதிக்கு எவ்வித சிரமமுமின்றி மாறுவதை உறுதி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒரு பிரம்மாண்டமான மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதாவது, மெட்ரோவிலிருந்து பேருந்து அல்லது மின்சார ரயிலுக்கு மிக எளிதாக மாறுவதை உறுதி செய்யும் வகையில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மெட்ரோவின் 41 முக்கிய நிலையங்கள் ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்களாக’ (Multimodal Hubs) தரம் உயர்த்தப்பட உள்ளன.
இதையும் படிக்க : சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு மெட்ரோ நிலையத்தையும் சுற்றியுள்ள 500 மீட்டர் ஆரப்பரப்பளவு (Radius) பகுதி முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க CMRL சமீபத்தில் டெண்டர் கோரியுள்ளது. சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட சென்னையின் 41 மிக முக்கியமான போக்குவரத்து மையங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
தடையற்ற பாதசாரி வசதிகள்:
மெட்ரோ நிலையங்களைச் சுற்றி இடைவெளியில்லாத நடைபாதைகள் (Continuous Footpaths), வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க நிழற்குடையுடன் கூடிய பாதைகள் (Shaded Walkways) மற்றும் சில இடங்களில் சாலைகளைக் கடக்காமல் செல்ல ‘ஸ்கைவாக்’ (Skywalk) எனப்படும் மேம்பால நீட்டிப்புகளும் அமைக்கப்படும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித தடையுமின்றி நிலையங்களுக்குள் சென்று வரும் வகையில் பாதுகாப்பான அணுகல் வசதிகள் உறுதி செய்யப்படும்.
கடைசி மைல் இணைப்பு:
பயணிகள் மெட்ரோவிலிருந்து இறங்கியவுடன் தங்களின் அடுத்தகட்ட பயணத்தைத் தொடர்வதில் நிலவும் சிக்கல்களைக் களைய ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கென பிரத்யேகமாக ஆட்கள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் (Pick-up & Drop-off zones) ஒதுக்கப்படும். பயணிகள் மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் நீண்ட தூரம் நடக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க, மாநகரப் பேருந்து (MTC) நிறுத்தங்கள் மெட்ரோ நுழைவாயில்களுக்கு மிக அருகிலேயே மாற்றியமைக்கப்படும்.
மெட்ரோ, மாநகரப் பேருந்து, பறக்கும் ரயில் (MRTS) மற்றும் புறநகர் மின்சார ரயில் ஆகிய நான்கு போக்குவரத்து அமைப்புகளையும் இணைப்பதே இத்திட்டத்தின் இறுதி நோக்கம்.
மெட்ரோ நிர்வாகம் கூறுவது என்ன?
“வெவ்வேறு போக்குவரத்து அமைப்புகளுக்கு இடையிலான இணைப்பு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் எளிதாக அணுகும் வசதி ஆகியவற்றை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இதன் மூலம் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்,” என்று CMRL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : குப்பை கொட்டியதில் தகராறு… கிரிக்கெட் மட்டையால் தாக்கி காரை ஏற்றி கொல்ல முயற்சி! காலில் நரம்பு துண்டிப்பு!
மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் நிலவும் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பற்ற சாலைக் கடப்புகள் மற்றும் பிற போக்குவரத்து வாகனங்களுடன் இணைப்பற்ற சூழல் குறித்த பயணிகளின் நீண்டகாலப் புகார்களுக்கு இத்திட்டம் ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.