தீபாவளி கூடுதல் கட்டணம்.. ஆம்னி பேருந்துகளிடம் ரூ.43 லட்சம் அபராதம் வசூல்!
Diwali 2025: தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்த விவகாரத்தில், தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை ரூ.43 லட்சத்திற்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பயணிகளின் சிரமத்தை கருதி, சிறப்புப் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, அக்டோபர் 18: தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை ரூ.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மக்கள் குடும்பத்தின் உடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள், விமானங்கள் என பலவகை போக்குவரத்து சாதனங்கள் மூலம் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத போக்குவரத்து சாதனமாக திகழும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
Also Read: தீபாவளி நாளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. பெரும் விபத்தை தவிர்க்கலாம்..!




இதனை தடுக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைக்கப்படாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதனிடையே சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல வழக்கமாக ரூபாய் ஆயிரத்து நூறு அதிகபட்சம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது கட்டணம் ரூபாய் 3500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் செல்ல அதிகப்படியான கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
பறக்கும் படை குழு – அபராதம் வசூல்
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவதும் தொடர்பாக கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல்துறையினர் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கான பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆம்னி பேருந்துகளை கூடுமானவரை கொண்டு சென்று வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆம்னி பேருந்துகளில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Also Read: தீபாவளி பண்டிகை.. ரூ. 1 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு மத்திய ரயில்வே..
அது மட்டுமல்லாமல் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 357 சோதனைகள் நடைபெற்று இதுவரை ரூ.43,55,961 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தனியார் முன்பதிவு ஆன்லைன் செயலிகள் கண்காணிக்கப்பட்டு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து அதன் கட்டணங்களை குறைக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.