மதுரைக்கு செல்ல ரூ.5,000 – 7,000ஆ? எச்சரிக்கையை மீறி கட்டணத்தை உயர்த்தும் ஆம்னி பேருந்துகள் – மக்கள் அதிர்ச்சி
Diwali Travel Rush: தீபாவளிக்கு இன்னும் ஒருசில நாட்களை உள்ள நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை 3 மடஙகாக உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு (Diwali) இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான பரபரப்பு துவங்கியுள்ளது. மக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர். பண்டிகை நாட்களில் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று சொந்த ஊர்களுக்கு செல்வது. காரணம், சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு பேருந்துகளிலும், ரயில்களிலும் (Train) டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்து வருகிறது. ரயில்களிலும், அரசு பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் கடைசியாக இருந்து வருகிறது. ஆனால் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரைக்கு ரூ.5000 கட்டணமா?
கடந்த சில நாட்களுக்கு முன் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 3 மடங்காக உயர்த்தியது. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல ரூ.5000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில், அதிக கட்டணம் வசூலித்தால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கைவிடுத்தார். இதனையடுத்து ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பாதியாக குறைத்து அறிவித்தன. இந்த நிலையில் ஒரு சில நாட்களிலேயே கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
இதையும் படிக்க : தீபாவளி ஸ்பெஷல்! சென்னை டூ மதுரை… முன்பதிவில்லாத 4 ரயில்கள் அறிவிப்பு – எப்போ தெரியுமா?




தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் தற்போது அறிவிக்கப்பட்டுள்லது. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு கட்டணத்தை ரூ.2,869 ஆக குறைக்கப்பட்டிருந்தது.
- இந்த நிலையில் அக்டோபர் 17, 2025 அன்று மதுரைக்கு ரூ. 5,000 கட்டணமும், அக்டோபர் 18, 2025 அன்று மதுரைக்கு கட்டணமாக ரூ. 7,555 வரை கட்டணத்தை அறிவித்துள்ளது. இவை வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு அதிகம்.
- அதே போல நாகர்கோவிலுக்கு ரூ.3,150 என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயித்த நிலையில், அக்டோபர் 17, 2025 அன்று கட்டணமாக ரூ.3,700 ஆகவும், அக்டோபர் 18, 2025 அன்று ரூ.4000 ஆகவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இதில் விதி விலக்காக தூத்துக்குடிக்கு ரூ.2,964 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதை விட ரூ.300 ஆக குறைவாக ரூ.2,660 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- அதே போல திருநெல்வேலிக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.3,180 என கூறப்பட்ட நிலையில், அக்டோபர் 17, 2025 அன்று ரூ.3,390 வரையும், அக்டோபர் 18, 2025 அன்று ரூ.3,499 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம்..
அதிக கட்டண புகார் எழுந்த நிலையில் கட்டணத்தை குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில் தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சரின் எச்சரிக்கையை மீறி, மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் இலவச தொடர்பு எண்ணான 1800 425 5161 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.