போக்குவரத்து பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு
Diwali Bonus : தீபாவளி பண்டிகையையை முன்னிட்டு ரூ.175 கோடி 51 லட்சம் மதிப்பிலான போனஸ் அக்டோபர் 15, 2025 அன்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்டோபர் 15: தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2024–2025 நிதியாண்டுக்கான ரூ.175 கோடி 51 லட்சம் மதிப்பிலான தீபாவளி (Diwali) போனஸ் அக்டோபர் 15, 2025 அன்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த தொகை மொத்தமுள்ள 1,05,955 பேரின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த போனஸானது தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மக்கள் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ள பகுதிகளில் சேவைகளை வழங்கும் வகையில், மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள், 20,912 பேருந்துகள் மூலமாக தினமும் சுமார் 1.97 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர் என்றார்.
இதையும் படிக்க : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு.. அமைச்சர் சிவசங்கர் வார்னிங்!




மேலும், இந்த போக்குவரத்து கழகங்கள் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்கின்றனர். இது மாநில அரசின் சமூக நலத் திட்டங்களுடன் நேரடியாக இணைந்துள்ள சேவை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து கழகங்கள் வழங்கும் பங்களிப்பு அளப்பரியது. எனவே போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தின் முக்கிய சமூக பாதுகாப்பு கட்டமைப்பாக நிகழ்கிறது என்றார்.
முதல்வர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்ட போனஸ்
தீபாவளியை முன்னிட்டு, போக்குவரத்து பணியாளர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, 2024–2025 நிதியாண்டுக்கான ரூ.175 கோடி 51 லட்சம் மதிப்பிலான போனஸ் பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அக்டோபர் 15, 2025 அன்று வரவு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 20,2025 அன்று தீபாவளி அன்று தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் செல்லவிருக்கின்றன. காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்கும்.
இதையும் படிக்க : Omni Bus: ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை.. புகாரளிக்க எண்கள் அறிவிப்பு!
அதே போல புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும். அதே போல ஆந்திரா, திருச்சி, சேலம், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து செல்லவுள்ளன. இதற்காக அக்டோபர் 16 முதல் 19 வரை சென்னையில் இருந்து 14,268 சிறப்பு பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 6,100 பேருந்துகள் என 20,372 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.