தீபாவளி ஷாப்பிங்! 18,000 போலீசார் பாதுகாப்பு… கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை மீட்க சிறப்புக் குழு
Diwali 2025 : தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க கடைகளில் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஷாப்பிங் செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக 18,000 காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 16, 2025 முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. குறிப்பாக சாலையோர வியாரிகள் மற்றும் பட்டாசு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கன மழை பெய்த நிலையில், அதே போல இந்த ஆண்டும் தீபாவளி அன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் சென்னையின் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
18,000 காவலர்கள் பாதுகாப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெருநகர் முழுவதும் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி ஷாப்பிங் செல்லும்போது கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து தரும் வகையிலும், சிறப்பு கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பிறகு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க : தீபாவளி டிமாண்ட் – கட்டணத்தை அதிரடியாக குறைத்த ஆம்னி பேருந்துகள் – எவ்வளவு தெரியுமா?
டி.நகரில் குவியும் மக்கள்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் தீபாவளியை முன்னிட்டு டி.நகரில் ரங்கநாதன் தெருவில் குவிந்து வருகின்றனர். ஷாப்பிங்கிற்கு பெயர் பெற்ற டி.நகர் ரங்கநாதன் தெருவில் கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சியளிக்கின்றன. உடைகள், அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதால் மக்கள் அங்கு அதிகம் செல்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சியுளிக்கின்றன. இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : நெருங்கும் தீபாவளி…. வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தீபாவளிக்கு மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அக்டோபர் 17, 2025 முதல் அக்டோபர் 18, 2025 ஆகிய தேதிகளில் சிங்கப்பெருமாள் கோயில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வந்து மீண்டும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னைக்குள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.