நாமக்கல்லில் கொடூர விபத்து..மினி லாரி மீது கனரக லாரி மோதல்..இடிபாடுகளில் சிக்கி மூவர் பலி!
Namakkal Road Accident: நாமக்கல் மாவட்டத்தில் மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது கனரக லாரி மோதிய கொடூர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

மினி லாரி மீது கனரக லாரி மோதியதில் மூவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 27) காலை கொடூர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். நாமக்கல்- திருச்சி சாலையில் வெளியூரில் இருந்து சமையல் எண்ணெய் லோடு ஏற்றுக் கொண்டு கனரக லாரி ஒன்று அந்தப் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, பின்னால் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி, சரக்கு வாகனத்தின் முன் பகுதி மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை சுக்குநூறாக நொறுங்கியது.
வாகன இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி
இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் கணேச புரத்தைச் சேர்ந்த கார்த்திக், ஜெய் நகரைச் சேர்ந்த சேனாதிபதி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மினி வேனின் ஓட்டுனர் ஆகிய 3 பேர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிருக்கு போராடினர். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பலத்த காயமடைந்தனர்.
மேலும் படிக்க: குடியரசு தின விடுமுறை எதிரொலி.. ஒரே நாளில் ரூ.220 கோடிக்கு மது விற்பனை!
இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பு
இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களின் சடலங்களை உடல் கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 3 பேரும் அவசர ஆம்புலன்ஸ் மூலம் அதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிரேன் மூலம் வாகனங்கள் மீட்பு
அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்தால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே, போலீசார் போக்குவரத்தை சரி செய்ததுடன், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து விபத்தில் சிக்கிய கனரக லாரி மற்றும் மினி வேனை கிரேன் இயந்திரம் மூலம் மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு.. ரவுடி அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காலையிலேயே பரபரப்பு..