போலீஸ் வாகனத்தில் பிரபல ரவுடியை கொலை செய்ய முயற்சி… போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு – பரபரப்பு சம்பவம்
Country Bomb Attack : மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளைக் காளி என்பவரை காவல்துறையினர் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவரை கொலை செய்ய வந்துள்ளது. அப்போது தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி தப்பி சென்றனர்.
பெரம்பலூர், ஜனவரி 24 : பெரம்பலூர் (Perambalur) மாவட்டத்தில், போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு (Bomb) வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை பகுதியில், காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளைக் காளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, மர்ம கும்பல் போலீஸ் வேனை வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், கைதிக்கு பாதுகாப்பாக வந்த காவல்துறையினரில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் மீது வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல்
தகவலறிந்த போலீசார், கைதியை கொலை செய்ய முயன்ற கும்பலை தடுக்க முயன்றபோது, மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சினிமா பாணியில் அவர்களிடம் இருந்து தப்பித்து 2 கார்களில் வந்த கொலைக் கும்பல் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : பெண்கள் புகைப்படங்களுடன் பேக் ஐடி மூலம் பணம் பறித்து மோசடி.. வசமாக சிக்கிய இளம்பெண்..




யார் இந்த வெள்ளைக் காளி?
ரவுடி வெள்ளைக் காளி மீது, ஒன்பது கொலை வழக்குகள், எட்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, மதுரை கிளாமர் காளி கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு மதுரையில் நடந்த அந்த கொலை, நீண்ட காலமாக நீடித்த முன் பகை காரணமாக நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ் பின்னர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்த நிலையில், மற்றொரு முக்கிய குற்றவாளியான வெள்ளைக் காளியை, வேறு ஒரு வழக்கிற்காக சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடுத்த வாரம் திருமணம்…பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்..எமனாக மாறிய வேன்!
சம்பவத்தை தொடர்ந்து, மர்ம கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காரில் சென்ற கும்பல் சாலையில் காரை சாலையோரம் விட்டுவிட்டு வேறு காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் வேனை குறிவைத்து நடந்த இந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதல், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.