டேங்கர் லாரி மீது மோதிய தனியார் பேருந்து… குழந்தை உள்பட 20 பேர் பலத்த காயம்.. மூவருக்கு தீவிர சிகிச்சை!
Kovilpatti Bus Lorry Accident: கோவில்பட்டியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை, பெண்கள் உள்பட 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

கோப்பு புகைப்படம்
கோவை மாவட்டத்தில் இருந்து வழக்கம் போல நேற்று செவ்வாய்கிழமை ( ஏப்ரல் 21) தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி கூறப்பட்டது. பேருந்தை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்தானது இன்று புதன்கிழமை ( ஏப்ரல் 22) காலை கோவில்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, மூப்பனம்பட்டி அருகே திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், பேருந்தானது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தின் உள்ளே பயணித்த பயணிகள் பலத்த காயம் அடைந்து அச்சத்தில் அலறினர். உடனே, அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆகியோர் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, கோவில்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தை உள்பட 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்பு
அதன்பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேருந்து உள்ளே சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், பேருந்தின் ஓட்டுநர், 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பயணிகள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில், பேருந்தின் ஓட்டுநர் உடுமலைப்பேட்டை சேர்ந்த சரவணன் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: திருவண்ணாமலை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? போலீஸ் திடீர் ட்விஸ்ட்.. களத்தில் இறங்கிய மகளிர் உரிமை ஆணையம்!
3 பேர் நெல்லையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
அங்கு, மூன்று பேர் மட்டும் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த திடீர் விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் சென்ற போது விபத்து
இதில், பல பயணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் பயணம் செய்த ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. இந்தச் விபத்து சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கள்ள ஓட்டு போடப்பட்டால் கவலை வேண்டாம்: மீண்டும் வாக்களிக்க சட்டத்தில் இடமுண்டு!