முட்டாள்தனம்.. பாகிஸ்தான் பயிற்சியாளரை சாடிய அக்தர்!
Asia Cup 2025: ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, முன்னாள் வீரர் சோயப் அக்தர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் பேட்டிங் சரிவு, தவறான அணித் தேர்வு குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசனை, முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய ஆசியக் கோப்பை தொடர் 2025, செப்டம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 28ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் மோதியது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 3 முறை பலப்பரீட்சை நடத்தியது. இதில் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இதனால் அந்த அணியை ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது கருத்தை தெரிவித்திருக்கின்றார். பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸனை சாடியுள்ள அவர், ஆசியக் கோப்பை ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 113-1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் கடைசியாக 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையும் படிங்க: விளையாட்டை மட்டும் பாருங்க.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை!




இதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் பிளேயிங் லெவனில் இருக்கும் குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சரியாக சிந்திக்காத நிர்வாகத்தின் மீதுதான் இந்த தோல்விக்கான மொத்த பொறுப்பும் உள்ளது. இதுபோன்ற கடுமையான வார்த்தைகளைச் சொல்ல வருந்துகிறேன். ஆனால் இது ஒரு அர்த்தமற்ற பயிற்சியின் முடிவை காட்டுகிறது.
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சிறப்பாக விளையாடக்கூடிய ஹசன் நவாஸ் நீக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்த அக்தர், சல்மான் மிர்சா விளையாடததையும் சுட்டிக் காட்டினார். நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம் மற்றும் வேதனையடைந்தோம். காரணம் ஃபைனல் நடந்த நாள் சூப்பர் சண்டே என சொல்லலாம். ஒட்டுமொத்த நாடும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியில் ஏற்கனவே உள்ள மிடில் ஆர்டர் பிரச்சனை பற்றி அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: டிராவிட்டின் கோபத்தை தூண்டிய அக்தர் – 2004 சாம்பியன்ஸ் டிராபியில் நடந்த வரலாற்றுச் சம்பவம்!
மேலும் கேப்டன் சல்மான் அலி அகாவின் முடிவெடுக்கும் திறன் குறித்தும் அக்தர் கேள்விகளை எழுப்பியுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பிற்கு இறுதி ஓவரை வழங்கியது ஒரு பெரிய தவறு என்றும் கூறினார்.இப்படியாக நாங்கள் தோற்றதற்கு பல காரணங்கள் உள்ளன எனவும் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த ஆசியக் கோப்பை தொடரில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியின்போது வெடித்தது. இந்த நிலையில் தோல்வியால் பாகிஸ்தான் அணி மீது சரமாரியாக விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.