பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு – யார் இவர் ?
Mithun Manhas becomes BCCI president : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 45 வயதான மிதுன் மன்ஹாஸ், முன்னதாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய தலைவராக முன்னாள் டெல்லி கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் (Mumbai) செப்டம்பர் 28, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ரோஜர் பினியின் பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வயது 45. மிதுன் மன்ஹாஸ் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
45 வயதான மிதுன் மன்ஹாஸ், முன்னதாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். கடந்த செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய நிர்வாகிகள் குழுவின் சந்திப்பில் அவர் பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிக்க : 2025 ஆசிய கோப்பையில் மட்டும் 12 கேட்சுகள் மிஸ்.. சொதப்பல் பீல்டிங்கில் தவிக்கும் இந்திய அணி!




பிற முக்கிய பதவிகள்
அவரைத் தொடர்ந்து பிசிசிஐயின் துணைத் தலைவராக ராஜீவ் சுக்லாவும், கௌரவ செயலாளராக தேவஜித் சைக்கியா, இணை செயலாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் பொருளாளராக ஏ.ரகுராம் பாட்டுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் மேலும் கவுன்சிலின் ஒரே உறுப்பினராக ஜெய்தேவ் நிரஞ்சன் ஷா தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த மிதுன் மன்ஹாஸ் ?
கடந்த 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று ஜம்மு காஷ்மீரில் பிறந்த மிதுன் மன்ஹாஸ், இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் திறம்பட செயல்பட்டு தேர்வகர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். வலதுகை பேட்ஸ்மேனாக விளையாடிய அவர், அவ்வப்போது ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சும், விக்கெட் கீப்பிங்கும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய வீரர்கள் தேசிய அணியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, டெல்லி அணியை பல முறை அவர் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். குறிப்பாக டெல்லி அணியில் இவர் கேப்டனாக இருந்த போது தான், இளம் வீரராக விராட் கோலி களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து 18 ஆண்டுகளாக 157 போட்டிகளில் விளையாடி 9,714 ரன்கள் குவித்துள்ளார். இதில் 27 சதங்கள், 49 அரை சதங்கள் ஆகியவை அடங்கும். குறிப்பாக கடந்த 2007 – 2008 ஆம் ஆண்டுகளில் 921 ரன்கள் அடித்து டெல்லி அணியை ரஞ்சி கோப்பையில் வெற்றி பெறச் செய்தது அவரது வாழ்க்கையின் சாதனையயாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!
ஐபிஎல் பயணம்
கடந்த 2008 முதல் 2010 ஆண்டு வரை ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் சார்பாக பங்கேற்றார். மேலும் 2011 முதல் 2013 வரை புனே வாரியர்ஸ் சார்பாகவும் பங்கேற்றார். கடந்த 2014 ஆம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் சார்பாக விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் மேலும் அதிகரிக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.