IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!
India Squad for West Indies Test: பிசிசிஐ, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2025, அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி அக்டோபர் 2 முதல் 6 ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் 14 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது. ஆசியக்கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா
இப்படியான நிலையில் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர், பேட்டர் என பன்முக திறமை வாய்ந்தவராக திகழ்ந்த ரிஷப் பண்ட் கடந்த ஜூன் மாதம் நடந்த இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த கருண் நாயர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். துலீப் டிராபியிலும், ஆஸ்திரேலியா ஏக்கு எதிரான டெஸ்டிலும் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்! அழைக்கும் பிசிசிஐ.. மௌனம் காக்கும் விராட் கோலி?
தொடரும் ஜஸ்பிரித் பும்ரா
தொடர்ச்சியாக அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியமளிக்கும் விதமாக அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட ஜஸ்பிரித் பும்ரா தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளார் என்று தேர்வுக் குழுவின் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். பும்ராவைத் தவிர வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா தொடரை சமன் செய்ய உதவிய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் மற்றும் டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருநாள் ஓய்வு முடிவு வாபஸ்! 2 ஆண்டுகளுக்கு பிறகு.. பாகிஸ்தான் எதிராக களமிறங்கும் டிக் காக்..!
இந்திய டெஸ்ட் அணி : சுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துர்வ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், நாராயணன் ஜெகதீசன்