Asia Cup: இந்திய அணி தேர்வு குறித்து கருத்து.. வெளிநாட்டு வீரர்களை சாடிய கவாஸ்கர்!
2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வெளிநாட்டு வீரர்கள் அணி தேர்வில் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணி தேர்வு குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணி தேர்வு குறித்து கருத்து சொன்ன வெளிநாட்டு வீரர்களை முன்னாள் இந்திய அணி கேப்டனான சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி ஆசியக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, அபிஷேக் சர்மா, சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி,ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், திலக் வர்மா, ஹர்ஷித் ராணா என பலரும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஜஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெறாதது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இதுதொடர்பான விவாதங்கள் ஊடகத்திலும், சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து சில வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
Also Read: ஆசியக் கோப்பையில் எந்த அணி எப்போது யாருடன் மோதுகிறது..? முழு அட்டவணை விவரம் இதோ!
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் கிரிக்கெட் சார்ந்த நிபுணர்கள் மத்தியில் எந்த விவாதமும் இல்லாமல் இருந்திருந்தால் தான் நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன். ஆனால், இந்தியாவிற்கு வெளியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட இந்த அணி தேர்வு பற்றி விவாதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்திய கிரிக்கெட்டில் எந்தப் பங்கும் இல்லாத அவர்கள், அணியைப் பற்றிய மிகக் குறைந்த அறிவைக் கொண்ட வெளிநாட்டு வீரர்கள், இத்தகைய விவாதத்தில் இறங்குவது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றது. அந்த வீரர்கள் உண்மையில் எவ்வளவு சிறந்த வீரர்களாக இருந்தாலும், இந்திய அணிக்கு எதிராக எத்தனை முறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் சரி, இந்திய அணியைத் தேர்வு செய்வது குறித்து பேசுவது பொருத்தமற்றது.
அந்த நபர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். அறிவுரை வழங்க வேண்டும். இந்திய அணியை விமர்சிக்கும் வீரர்கள் தங்கள் நாட்டு அணி தேர்வு செய்யும்போது அது சரி என்பது போல பதிலளிக்க மாட்டார்கள். ஆனால் இந்திய அணி விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைப்பது ஏன்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாங்கள் யாரை தேர்வு செய்கிறோம், செய்யவில்லை என்பதில் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.