Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ind Vs Pak : கடைசி கட்டத்தில் பரபரப்பு… பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Asia Cup 2025 : ஆசிய கோப்பை 2025 போட்டியில், செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகள் அனைத்தையும் இழந்து 19.1 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Ind Vs Pak : கடைசி கட்டத்தில் பரபரப்பு… பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Asia Cup 2025
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Sep 2025 00:09 AM IST

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டி, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சாஹிப்சதா ஃபர்ஹான் மற்றும்  ஃபகார் ஜமான் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் மேல் எடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பதிலடி கொடுத்த பும்ரா

பாகிஸ்தானின் பேட்டிங்கின் போது, ​​பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சால் ஹாரிஸ் ரவுஃப்பை பெவிலியனுக்கு அனுப்பினார். இந்த சம்பவம் 18வது ஓவரில் நடந்தது. விக்கெட்டை எடுத்த பிறகு, பும்ரா ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவது போல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  முன்பு சூப்பர் 4 போட்டியில் ஹரிஸ் ரவுஃப்  பவுண்டரில் லைனில் இதேபோன்று செய்ததைக் காண முடிந்தது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமா பும்ராவின் கொண்டாட்டம் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : முக்கிய போட்டிகளில் பேட்டிங்கில் தடுமாற்றம்.. டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை எப்படி?

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ்

சிறப்பான பந்து வீசிய பும்ரா இந்த போட்டியில் மொத்தம் 3.1 ஓவர்கள் வீசி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவூஃப் தவிர, பும்ரா முகமது நவாஸையும் வெளியேற்றினார். அவரது ஆட்டம் பாகிஸ்தான் ரன் வேட்டையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியது. ஆனால் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் என்றால் குல்தீப் யாதவ் தான். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் தங்கள் பங்குக்கு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிக்க : பிசிசிஐயின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு – யார் இவர் ?

இந்தியாவுக்கு மோசமான துவக்கம்

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சயளித்தனர். பின்னர் திலக் வர்மாவுடன் கைகோர்த்த சஞ்சு சாம்சன் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணி 12 ஓவர்களில் வெறும் 70 ரன்கள் தான் எடுத்தது. ஆனால் இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. அப்ரர் அகமதுவின் பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 21 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி, 1 சிக்ஸ் என 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சரிவில் இருந்து மீட்ட திலக் வர்மா

அவரைத் தொடர்ந்து திலக் வர்மாவுடன் சிவம் துபே ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய திலக் வர்மா தனது அரை சதத்தை பதிவு செய்தார். அவருக்கு தன் பங்குக்கு ஆதரவு அளித்தார் சிவம் துபே. ஒரு கட்டத்தில் அவரும் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த திலக் வர்மா, அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். பின்னர் அந்த ஓவரின் 3வது பாலில் ஒரு ரன் எடுக்க, 4 வது பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.