IND vs PAK: விளையாட்டை மட்டும் பாருங்க.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை!
Asia Cup 2025: ஆசியக்கோப்பை 2025 தொடரானது இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது.செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த தொடரில் 3வது முறையாக மோதுவதால் யார் வெற்றிப் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தனது வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப் பெற்றது. இப்படியான நிலையில் சூப்பர் 4 சுற்றில் நடைபெற்ற போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த தொடரில் 3வது முறையாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.
இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்கா இந்த பிரச்னையை தீர்க்க முற்பட்டு வரும் நிலையில் அரசியல் தாண்டி விளையாட்டிலும் இந்த பிரச்னை எதிரொலித்து வருகிறது.
இதையும் படிங்க: ஆசியக் கோப்பை ஆடுகளத்தில் அடுக்கப்பட்ட சாதனை.. வரலாறு படைத்த இந்திய அணி!




அந்த வகையில் ஆசியக்கோப்பைக்கு முன்னால் நடைபெற்ற சில விளையாட்டுகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா புறக்கணித்தது. இதனால் திட்டமிட்டபடி ஆசிய கோப்பை போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடந்த 2 போட்டிகளின் முடிவிலும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றியும் பெற்றது.
துபாயில் நடந்த சூப்பர் 4 ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மைதானத்தில் இந்திய ரசிகர்களை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகைகளை செய்தது கண்டனத்தைப் பெற்றது. இருவரின் செயல்கள் குறித்து இந்தியா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் அளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது தனது புகாரைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: செய்தியாளர்கள் அடுக்கிய கேள்வி! கூலாக பதிலளித்த சூர்யகுமார் யாதவ்!
சூப்பர் 4 ஆட்டத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் வெற்றியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதாகவும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்பிப்பதாக அவர் கூறினார். விளையாட்டில் சூர்யகுமார் யாதவ் அரசியலை கலப்பதாக புகாரளிக்கப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இப்படியாக களத்துக்கு வெளியே பெரும் சர்ச்சைகளை வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் வீரர்களுக்கு சொல்வது என்னவென்றால், நாம் கிரிக்கெட்ல மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். அந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் என்னை விட நன்றாக தெரிந்து வைத்திருப்பீர்கல். நீங்கள் அதிக அழுத்தமான விளையாட்டுல இருக்கும்போது, வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.