Asian Games 2026: 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மராத்தானில் இந்தியாவுக்கு பதக்கம் – சவான் பார்வால் வரலாறு..
Silver Medal In Marathon: போட்டியின் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் ஓடிய பார்வால், 21 கி.மீ. தூரத்தில் முன்னிலை பெற்றார். 30 முதல் 35 கி.மீ. வரையிலான கட்டத்தில் ஜப்பான், சீனா மற்றும் இந்திய வீரர்கள் அடங்கிய முன்னணி குழுவில் அவர் நீடித்தார். 36 கி.மீ. தூரத்தில் யமஷிதா முன்னிலை பெற்றபோதும், பார்வால் தனது வேகத்தைத் தக்கவைத்து இரண்டாவது இடத்தை உறுதி செய்தார்.
செப்டம்பர் 26, 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான மராத்தான் ஓட்டத்தில் இந்திய வீரர் சவான் பார்வால் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 2 மணி 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் இலக்கை எட்டிய அவர், புதிய தனிப்பட்ட சாதனையுடன் தேசிய சாதனையையும் பதிவு செய்தார்.
ஜப்பானின் இச்சிடாகா யமஷிதா 2:10:49 நேரத்தில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் பெய்யோ ஃபெங் 2:12:13 நேரத்தில் ஓடி வெண்கலப் பதக்கம் பெற்றார். யமஷிதாவை விட 48 வினாடிகள் பின்தங்கிய பார்வால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மாரத்தானில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவான் பார்வால்:
போட்டியின் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் ஓடிய பார்வால், 21 கி.மீ. தூரத்தில் முன்னிலை பெற்றார். 30 முதல் 35 கி.மீ. வரையிலான கட்டத்தில் ஜப்பான், சீனா மற்றும் இந்திய வீரர்கள் அடங்கிய முன்னணி குழுவில் அவர் நீடித்தார். 36 கி.மீ. தூரத்தில் யமஷிதா முன்னிலை பெற்றபோதும், பார்வால் தனது வேகத்தைத் தக்கவைத்து இரண்டாவது இடத்தை உறுதி செய்தார்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மராத்தான் ஓட்டத்தில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதக்கம் வென்றுள்ளது. 1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்தப் பிரிவில் கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
மேலும் படிக்க: இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளி தஞ்சம்.. ஓடோடி பெற்று கொடுத்த குல்வீர் சிங்!
மேலும், இந்த ஆண்டின் ஏப்ரலில் ரோட்டர்டாம் மாரத்தானில் 2:11:58 நேரத்தில் ஓடி சிவநாத் சிங்கின் 48 ஆண்டுகால தேசிய சாதனையை பார்வால் முறியடித்திருந்தார். தற்போது 2:11:37 நேரத்தில் ஓடி தனது சாதனையையே மேம்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான கார்த்திக் கார்கேரா 19 வீரர்களில் 17-வது இடத்தைப் பிடித்தார்.
கம்பூன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலம்:
ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தடகளத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. மகளிர்க்கான கம்பூன்றித் தாண்டும் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயதான வீராங்கனை பரணிகா இளங்கோவன் 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் பெருமை! கம்பூன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலம்.. பரணிகாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், ஆண்கள் அல்லது மகளிர் என எந்தப் பிரிவிலும் கம்பூன்றித் தாண்டும் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். இந்தப் போட்டியில், பரணிகா மற்றும் போலினா இவனோவா இருவரும் 4.15 மீட்டர் உயரம் தாண்டினர். அதேநேரத்தில். இருவரும் 4.25 மீட்டர் தடையைத் தாண்டத் தவறினர். இதன் காரணமாக, இரு வீராங்கனைகளுக்கும் கூட்டாக வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.