MS Dhoni: சூர்யவன்ஷி பெற்ற ஆசிர்வாதம்.. வயசாகிடுச்சு போல என நக்கலாக பதிலளித்த எம்.எஸ்.தோனி!
MS Dhoni's IPL Retirement Hint: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் 2025 வெற்றியைத் தொடர்ந்து, கேப்டன் எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 2026 சீசனில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது தெளிவாக இல்லை. தனது வயது குறித்துப் பேசிய தோனி, ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மரியாதைக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி நேற்று அதாவது நேற்று 2025 மே 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025 தொடரை வெற்றியுடன் முடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் ஓய்வு குறித்து அளித்த பதில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. வெற்றிக்கு பிறகு பேசிய எம்.எஸ்.தோனி (MS Dhoni), ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதை அவர் தெளிவாக கூறவில்லை. வீரர்கள் தங்கள் செயல்திறனை அடிப்படையாக கொண்டு ஓய்வு பெற தொடங்கினால், பலரின் வாழ்க்கை 22 வயதில் முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
வயதாகிவிட்டதா..? தோனி விளக்கம்:
Will the MS Dhoni story continue in #TATAIPL❓
🎥 Hear from the #CSK legend himself as he signs off from the 2025 season 🙌 💛#GTvCSK | @ChennaiIPL | @msdhoni pic.twitter.com/uigzZJlSvk
— IndianPremierLeague (@IPL) May 25, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயதே ஆன இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தோனியின் கால்களை தொட்டு மரியாதை செலுத்திய ஒரு நெகிழ்ச்சியான தருணம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக போட்டிக்கு பிறகு வீரர்கள் கைகுலுக்கி செல்வார்கள். ஆனால், ராஜஸ்தான் வீரர் வைபவ் சூரியவன்ஷி கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டு, தோனியின் கால்களை தொட்டு வணங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அப்போது, தோனி புன்னகைத்து, சூர்யவன்ஷியின் கையை பிடித்து மென்மையாக தட்டி கொடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உங்கள் காலை தொட்டு வணங்கியபோது நீங்கள் எப்படி பீல் செய்தீர்கள் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தோனியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எம்.எஸ்.தோனி சிரித்தப்படி, “உண்மையில் எனக்கு வயதாகிவிட்டதை போல் உணர்ந்தேன். இதற்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள எங்கள் வீரர் ஆண்ரே சித்தார்த்திடம் உங்களுக்கு என்ன வயது என்று கேட்டேன். அப்போது அவர், என்னை விட 25 வயது சிறியவர் என்று தெரிவித்தார். இதை கேட்டபிறகுதான், ஆம் எனக்கு நிஜமாகவே வயதாகிவிட்டது என்று எனக்கு தோன்றியது” என்று தெரிவித்தார்.
ஓய்வு எப்போது..?
தொடர்ந்து ஹர்ஷா போக்லே தோனியிடம் ஐபிஎல் 2026 சீசனில் விளையாடுவீர்களா, இல்லையா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த, ஓய்வு குறித்து எனக்கு முடிவு செய்ய 4-5 மாதங்கள் உள்ளன. என்ன செய்ய வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் உடலை ஃபிட்டாக வைத்திருக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் உங்களால் முடிந்ததை செய்ய வேண்டும்.
நீங்கள் எவ்வளவு பசியுடன் இருக்கிறீர்கள், எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்பதை பார்ப்பது முக்கியம். அணிக்கு நீங்கள் எவ்வளவு பங்களிக்க முடியும்..? அணிக்கு தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், எனக்கு போதுமான நேரம் இருக்கிறது. நான் ராஞ்சிக்கு திரும்பி செல்வேன். சில பைக் சவாரிகளை ரசித்துவிட்டு பின்னர் முடிவு செய்வேன். நான் இப்போது ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லவில்லை. நான் திரும்பி வருகிறேன் என்றும் சொல்லவில்லை. எனக்கு நிறை நேரம் இருக்கிறது. நான் யோசித்து பின்னர் ஒரு முடிவை எடுப்பேன்.” என்று தெரிவித்தார்.