IPL 2025 Qualifier 2: குவாலிஃபையர் 2 மழையால் ரத்தா..? எந்த அணி பைனலுக்கு செல்லும்..?

Punjab Kings vs Mumbai Indians Qualifier 2: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2ல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜூன் 1, 7:30 மணிக்கு அகமதாபாத்தில் போட்டி. மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் நாள் உள்ளது. ரிசர்வ் நாளிலும் ரத்து என்றால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும். மழை வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2025 Qualifier 2: குவாலிஃபையர் 2 மழையால் ரத்தா..? எந்த அணி பைனலுக்கு செல்லும்..?

மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்

Updated On: 

31 May 2025 20:05 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) குவாலிஃபையர் 2ல் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் (Qualifier 2: PBKS vs MI) மோதுகிறது. இந்த போட்டியானது நாளை அதாவது 2025 ஜூன் 1ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 2025 மே 30ம் தேதியான நேற்று, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிஃபையர் 2ல் அடியெடுத்து வைத்தது. இப்போது குவாலிஃபையர் 2ல் வெல்லும் அணி ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியை எதிர்கொள்ளும். இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 ரத்து செய்யப்பட்டால், எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம்.

குவாலிஃபையர் 2 ரத்தானால் என்ன நடக்கும்..?

ஐபிஎல் 2025 சீசனில் மழை குறுக்கீட்டதன் காரணமாக பல போட்டிகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மழை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மும்பை – பஞ்சாப் இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டால், என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நல்ல வேளையாக, மும்பை – பஞ்சாப் இடையிலான குவாலிஃபையர் 2க்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள போட்டி நடத்தப்படும். அதேநேரத்தில், அறிவிக்கப்பட்ட ரிசர்வ் நாளிலும் போட்டி ரத்து செய்யப்பட்டால், புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு நலன் கிடைக்கும்.

அதாவது, ரிசர்வ் நாளிலும் போட்டி ரத்து செய்யப்பட்டால் பஞ்சாப் கிங்ஸ் அணி நேரடியாக பயனடையும். ஏனெனில், லீக் போட்டிகள் முடிந்தபோது, பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 19 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்தது. அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்திருந்தது. குவாலிஃபையர் 1 இல் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மழைக்கு வாய்ப்புள்ளதா..?

பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெறும் நாளான நாளை (2025 ஜூன் 1ம் தேதி) மழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இதன் காரணமாக, போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஒருவேளை போட்டியின் நடுவில் மழை பெய்தால், போட்டி நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் அதாவது 2025 ஜூன் 2ம் தேதி போட்டி மீண்டும் விட்ட இடத்தில் இருந்தே தொடரும்.