GT vs LSG: கலக்கிய மார்ஷ், ஓ’ரூர்க்.. குஜராத் அணியை ஓடவிட்ட லக்னோ..!
Gujarat Titans vs Lucknow Super Giants: ஐபிஎல் 2025 இன் 64வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மிட்செல் மார்ஷின் சதத்தின் உதவியுடன், லக்னோ 235 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 202 ரன்களில் சுருண்டது. லக்னோவின் பந்துவீச்சாளர்கள் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். வில்லியம் ஓ'ரூர்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 64வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 22ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தப் போட்டியில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து மிட்செல் மார்ஷின் சதத்தால் 235 ரன்கள் என்ற சிறப்பான ஸ்கோரைப் பதிவு செய்தது. இந்த இலக்கை துரத்திய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
236 ரன்கள் இலக்கு:
236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். இந்த இருவரின் கூட்டணி மீண்டும் ஒருமுறை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இடையே 46 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் இருந்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த சாய் சுதர்ஷன், லக்னோவுக்கு எதிரான இந்த போட்டியில் வெறும் 21 ரன்கள் எடுத்து 5வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லருடன் 39 ரன்கள் சேர்த்த சுப்மன் கில் நல்ல ஃபார்மில் விளையாடி கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்க நேரத்தில் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, உள்ளே வந்த பட்லரும் 33 ரன்களில் ஆட்டமிழக்க, குஜராத் அணி 96 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பிறகு, ஷெர்பான் ரூதர்ஃபோர்டுக்கும் ஷாருக்கானுக்கும் இடையே 86 ரன்கள் கூட்டணி அமைந்தது. இதன் காரணமாக குஜராத் அணி போட்டியில் வெற்றியை நோக்கி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது. ரூதர்ஃபோர்டு 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனபோது குஜராத் அணிக்கு வெற்றி எளிதாக இருந்தது. இந்த நேரத்தில் குஜராத் அணிக்கு 23 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில், குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விழவே, ஜிடி அணி அடுத்த 20 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
கலக்கிய லக்னோ பந்துவீச்சாளர்கள்:
Sweet, sweet victory 🥹 pic.twitter.com/HYl5glTzFH
— Lucknow Super Giants (@LucknowIPL) May 22, 2025
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக வில்லியம் ஓ’ரூர்க் 3 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கடைசி ஓவரில் ஆயுஷ் படோனி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இது தவிர, ஆகாஷ் சிங் மற்றும் ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.