IND vs ENG 1st Test: அறிமுக போட்டியில் திணறிய சாய் சுதர்சன்.. தமிழில் அறிவுரை வழங்கிய கே.எல்.ராகுல்.. வைரலாகும் வீடியோ!
KL Rahul Tamil Speak Video: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், கே.எல். ராகுல் சாய் சுதர்சனிடம் தமிழில் அறிவுரை வழங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. சாய் சுதர்சன் டக் அவுட் ஆன பின், ராகுல் அவரை ஊக்கப்படுத்தி, பவுன்ஸ் பற்றி தமிழில் கூறியது இந்த வீடியோவில் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய் சுதர்சன் முக்கிய வாய்ப்பை தவறவிட்டதையும் இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

ஹெடிங்லி கிரிக்கெட் ஸ்டேயத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்டின் (IND vs ENG 1st Test) மூன்றாம் நாளான நேற்று அதாவது 2025 ஜூன் 22ம் தேதி சிறப்பாக பேட்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து அணி 465 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் (KL Rahul) ஆட்டமிழக்காமல் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியின்போது கே.எல்.ராகுல் மற்றும் சாய் சுதர்சன் (Sai Sudharsan) தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழில் பேசிய கே.எல்.ராகுல்:
மேகமூட்டமான வானம் மற்றும் மழை அச்சுறுத்தலுடன் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. 4வது ஓவரின் தொடக்கத்தில் பிரைடன் கார்ஸ் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான சாய் சுதர்சன், இரண்டாவது இன்னிங்ஸில் நிதானத்துடன் விளையாடினார். அவர் பொறுமையாக பேட்டிங் செய்த நிலையில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் – சாய் சுதர்சன் பார்டனர்ஷிப்பின்போது அறிமுக வீரர் சாய் சுதர்சனுக்கு உதவும் விதமாக கே.எல். ராகுல் தமிழில் சில அறிவுரை வழங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




கே.எல்.ராகுல் தமிழில் பேசிய வீடியோ:
View this post on Instagram
கே.எல்.ராகுல் அந்த வீடியோவில் சாய் சுதர்சனிடம் ”நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி, நல்ல பவுன்ஸ் ஆகுது” என்று தெரிவித்தார். சாய் சுதர்சன் என்னதான் தமிழ்நாட்டு காரர் என்றாலும், அண்டை மாநிலமான கர்நாடகாவை சேர்ந்த கே.எல்.ராகுல் தமிழில் பேசி அறிவுரை வழங்கிய விதத்தை முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நல்ல வாய்ப்பை தவறவிட்ட சாய் சுதர்சன்:
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சாய் சுதர்சன் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 2வது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எதிரணிக்கு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அப்போது, அவரது கேட்ச் தவறவிடப்பட்டது. இருப்பினும், அதை அவர் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை, மேலும் 6 ரன்கள் சேர்த்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்படி, 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சாய் சுதர்சன் முக்கிய வாய்ப்பை தவறவிட்டார்.