Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சக்கரத்தாழ்வார் கிடைத்தால் ரொம்ப புண்ணியம்.. இந்த கோயில் தெரியுமா?

கடையநல்லூர் நீலமணிநாதர் கோயில், திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்று காட்சி தரும் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறது. அர்ஜுனனின் பாவ மன்னிப்புடன் தொடர்புடைய வரலாற்றையும், மகாலட்சுமி, ஆண்டாள், விஸ்வக்சேனர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளையும் கொண்டுள்ளது. இந்தக் கோயிலின் தனித்துவமான தட்சிணாமூர்த்தி சிலையும், இரண்டு ஆஞ்சநேயர்களின் அருள்பாலிப்பும் குறிப்பிடத்தக்கவையாகும்.

சக்கரத்தாழ்வார் கிடைத்தால் ரொம்ப புண்ணியம்.. இந்த கோயில் தெரியுமா?
நீலமணிநாத பெருமாள் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Sep 2025 13:03 PM IST

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே வைணவ சமயத்தினரின் முதன்மை வழிபாட்டு தெய்வமான பெருமாள் கோயில்கள் களைகட்டி விடும். இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலகத்தில் தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காக விஷ்ணு பகவான் தசாவதாரங்கள் எடுத்தார். அப்படிப்பட்ட அவர் சமய பேதமின்றி அனைவராலும் வணங்கப்பட்டு வருகிறார். இப்படியான பெருமாளுக்கு உள்ளூர் முதல் உலகம் வரையிலான பல்வேறு கோயில்கள் உள்ளன. அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அமைந்திருக்கும் நீலமணிநாதர் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இது கரியமாணிக்க பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5.30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலில் மூலவரான நீல மணிநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இவர் திருப்பதி வெங்கடாசலபதி தோற்றத்தில் காட்சியளிப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கேட்டது அனைத்தும் கிடைக்கும்.. இந்த ஆதி கேசவ பெருமாள் கோயில் தெரியுமா?

திருப்பதியில் வேண்டுதல்கள் நிறைவேற்ற முடியாதவர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். அதனால் எப்போது மக்கள் நடமாட்டம் இருந்து இக்கோயில் இருக்கும். இந்த கோயிலின் பிரகாரத்தில் மகாலட்சுமி, ஆண்டாள், விஷ்ணுவின் படைத் தளபதியான விஸ்வக்சேனர் ஆகியோருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சிறப்புகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

கோயில் உருவான வரலாறு

குருஷேத்திரப் போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அர்ஜுனன் வீரர்களை கொன்ற பாவம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு வருகை தந்து தாமிரபரணியில் நீராட முடிவு செய்தார். அதன் பின் தனது வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு படைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதே இந்த கோயில் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் வந்த நிலையில் அங்கிருந்த ஒரு மருத மரத்தின் அடியில் சற்று ஓய்வு எடுக்கலாம் என அமர்ந்தார்.

அப்போது விஷ்ணு பகவான் அவரது கனவில் தோன்றி தான் இந்த மரத்தின் அருகில் ஓரிடத்தில் இருக்கிறேன் என அந்த இடத்தை சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் அவ்விடத்தில் இருக்கும் தன்னை வணங்கினால் உன்னுடைய பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்த அர்ஜுனன் மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்று அங்கு சுயம்புவாக பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருப்பதை கண்டு அதிசயித்தார்.

இதையும் படிங்க:  புரட்டாசி மாதம்.. இந்த ஒரு மாதம் என்னென்ன செய்யக்கூடாது?

அதனை எடுத்து பிரதிஷ்டை செய்து வணங்கினார் பிற்காலத்தில் இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர் இந்த இடத்தில் கோயில் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் நீலமணி நாதர் ஸ்ரீ பூமி நீளாதேவியருடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். புத்திர தோஷம் இருப்பவர்கள் திருவோண நட்சத்திர நாளில் பாயாசம் மற்றும் பிற நாட்களில் கருவேப்பிலை சாதம் ஆகியவற்றை பிரசாதமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு வேண்டினால் தோஷங்கள் விரைந்து நீங்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் பதினாறு கைகளுடன் எழுந்தருளியிருக்கிறார்.

இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையும் அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நரசிம்மருக்கு கீழே ஐந்து நாகம் இருப்பது மற்ற இடங்களில் காணக் கிடைக்காத அதிசயமாகும். இந்த கோயிலில் சக்கரத்தாழ்வாரின் தரிசனம் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் பெருமாள் கோயிலாக இருந்தாலும் இங்கு சிவாம்சமாக தட்சிணாமூர்த்தி இருப்பது மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால் இந்த கோயிலில் இடது காலை தரையில் ஊன்றி ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல் மடக்கி வைத்து காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் வலது பக்கமாக முகம் வைத்திருக்க வேண்டிய முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி இருப்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாகும்.

மேலும் இந்த கோயிலில் இரண்டு ஆஞ்சநேயர்கள் உள்ள நிலையில் அவர்களை வேண்டிக் கொண்டால் எண்ணிய செயல்கள் யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று இந்த கோயிலில் வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)