Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேட்டது அனைத்தும் கிடைக்கும்.. இந்த ஆதி கேசவ பெருமாள் கோயில் தெரியுமா?

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில், திரேதாயுக கால வரலாற்றைக் கொண்டது. பேயாழ்வார் அவதரித்த தலம் இது என்பது சிறப்பானது. மூலவரான ஆதி கேசவப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு நாட்களில் மட்டுமே காட்சி கொடுக்கிறார்.

கேட்டது அனைத்தும் கிடைக்கும்.. இந்த ஆதி கேசவ பெருமாள் கோயில் தெரியுமா?
ஆதி கேசவ பெருமாள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Jul 2025 17:01 PM

சைவ தலங்களுக்கும், வைணவ தலங்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் இருந்தாலும் இரு சமய மக்களும் நல்லிணக்கத்தை இன்றளவும் தொடர்ந்து பேணி வருகின்றனர். வைணவ மக்களின் முதன்மை கடவுளாக அறியப்படும் பெருமாள் பல்வேறு பெயர்கள், உருவத்தில் அருள்பாலித்து வருகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜர், திருச்சி ரங்கநாதர் என தமிழ்நாட்டின் பிரபலமான பெருமாள் கோயில்கள் இருந்தாலும் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் தனித்துவமான அடையாளத்துடன் திகழ்கிறது. இந்த கோயிலானது தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 11 மணி வரை திறந்திருக்கும். மாலையில் 4 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 9 மணிக்கு தான் அடைக்கப்படும். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் இக்கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த கோயில் பற்றிய சிறப்புகளை காணலாம்.

கோயிலின் தல வரலாறு

இந்தக் கோயில் உருவான வரலாறை பார்த்தோம் என்றால் திரேதாயுகத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தில் உள்ள கைரவினி புஷ்கரினியின் கரையில் மகரிஷிகள் இணைந்து யாகம் நடத்தியுள்ளனர். அப்போது மது என்ற அசுரன் யாகம் நடக்க விடாமல் தொல்லை கொடுக்க செய்தான். இதனால் யாகம் சிறப்பாக நடந்திட அசுரனை அளிக்க வேண்டும் என மகரிஷிகள் மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர்களுக்கு காட்சி கொடுத்த மகாவிஷ்ணு அசுரனை அளித்து விடுவதாகவும் யாகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் கூறினார். அதன்படி மகரிஷிகள் யாகத்தை தொடர்ந்த நிலையில் அசுரன் அழிந்தான். பின்னர் மகரிஷிகளின் வேண்டுதலுக்காக விஷ்ணு இந்த கோயிலில் ஆதி கேசவப் பெருமாள் என்ற பெயரில் எழுந்தருளினார்.

இதையும் படிங்க: இல்லற வாழ்க்கை செழிக்க அருளும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

கோயிலின் சிறப்புகள் 

இந்தக் கோயில் தான் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த இடமாகும். மேலும் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றாக இருக்கும் நந்தகம் என்னும் வாள், மகாலட்சுமியிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி வேண்டியது. இதனைத் தொடர்ந்து அந்த வாளை பூலோகத்தில் பிறந்து மகாவிஷ்ணுவை வணங்கும்படியும், அப்போது உபதேசம் செய்கிறேன் எனவும் மகாலட்சுமி தெரிவித்தாள். அதன்படி வாள் இங்குள்ள மணி கைரவினி தீர்த்தத்தில் அல்லி மலரில் அவதரித்தார். இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி அவருக்கு உபதேசம் செய்தார். இவர் பெருமாள் மீது  பேய் போன்று பக்தி கொண்டிருந்ததால் பேயாழ்வார் என அழைக்கப்பட்டார். பேய் என்றால் ஆழ்வார்களில் பெரியவர் என்ற பொருள் உண்டு. அதனால் இவர் ஆழ்வார்களின் பெரியவர் என அழைக்கப்படுகிறார்.

இந்த ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். மற்ற கோயில்களைப் போல இங்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் உடன் இல்லை. மேலும் இந்தக் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, திருவோணம் ஆகிய நாட்களில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஆதி கேசவ பெருமாள் காட்சிக் கொடுக்கிறார். வெள்ளிக்கிழமை தோறும் தாயாரான மயூரவல்லியும், பூரம் நட்சத்திர நாளில் ஆண்டாளும், புனர்பூச நட்சத்திர நாளில் ராமரும் பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி.. இந்த கோயில் தெரியுமா?

பங்குனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோல் தை அமாவாசையொட்டி 5 நாட்கள் தெப்ப திருவிழா நடைபெறும். இந்த கோயிலில் குடும்பத்துடன் வேண்டினால் எதிரிகள் தொல்லை நீங்கி ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)