Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dindigul: திண்டுக்கலை ஆளும் சௌந்தரராஜ பெருமாள்… இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?

Famous Perumal temples in Tamilnadu: தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், மதுரை கள்ளழகர் கோயிலுக்கு இணையான சிறப்பு வாய்ந்தது. துர்வாச முனிவரின் சாபத்தால் தவளையான மண்டூக மகரிஷியின் வேண்டுதலுக்கு இணங்க கள்ளழகர் எழுந்தருளினார். திருமணம், குழந்தைப்பேறு, கல்வி போன்றவற்றிற்காக பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

Dindigul: திண்டுக்கலை ஆளும் சௌந்தரராஜ பெருமாள்… இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?
சௌந்தரராஜ பெருமாள் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Sep 2025 11:34 AM IST

புரட்டாசி மாதம் பிறந்தாலே நம் அனைவரின் மனதிற்குள்ளும் பெருமாள் குடிகொண்டு விடுவார் என சொல்வோம். அந்த அளவுக்கு அவருக்கான மாதமாகவும், இந்து மதத்தில் இம்மாதம் முழுவதும் ஆன்மிக மாதமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. பெருமாள் பல அவதாரங்களில், பல்வேறு பெயர்களில் அனைத்து ஊர்களிலும் மூலவராக சிறிய கோயில் முதல் பெரிய கோயில் வரை காட்சியளிக்கிறார். அப்படியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் சௌந்தரராஜ பெருமாள் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலை தினசரி காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களாக தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த கோயில் பற்றிய வரலாறு, சிறப்புகள் பற்றி அறிவோம்.

கோயில் உருவான வரலாறு

துர்வாச முனிவரால் சுதபஸ் முனிவர் சாபம் பெற்று தவளையாக மாறினார். மண்டூகம் என்றால் தவளை என பொருள்படும் நிலையில் இந்த மகரிஷி மண்டூக மகரிஷி என அழைக்கப்பட்டு வந்தார். இவர் தன் சாபத்தை போக்குவதற்காக இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்தில் அமர்ந்து மகாவிஷ்ணுவை வேண்டி தவம் இருந்தார். அப்போது அசுரன் ஒருவன் மகரிஷியின் தவத்தை தொந்தரவு செய்து வந்த நிலையில் அவனிடம் இருந்து தன்னை காக்குமாறு மதுரையில் அருளும் கள்ளழகரை வேண்டினார். உடனடியாக மகரிஷிக்கு உதவிய கள்ளழகர் அசுரனை அழித்தார்.

மேலும் அவரது வேண்டுதலுக்காகவே இங்கேயே கோயில் கொண்டு எழுந்தருளி சௌந்தரராஜர் என்ற திருநாமம் பெற்றார். இந்த கோயில் மதுரை அழகர் கோயிலுக்கு இணையான சிறப்பை பெற்றது. 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர ஆட்சியில் வழிவந்த  அட்சுத தேவராயர் இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.

Also Read: பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?

கோயிலின் சிறப்புகள்

இந்த சௌந்தரராஜர் கோயிலில் கல்வி தெய்வங்களாக அறியப்படும் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதி ஆகியோர் அடுத்தடுத்து தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர். திருவோணம் அன்று ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடைபெறுகிறது. இந்த ஹயக்ரீவருக்கு நாட்டு சர்க்கரை, தேங்காய் மற்றும் நெய் கலந்த கலவையை படைத்து ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இக்கோயிலில் தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது.  அமாவாசை நாளில் அவருக்கு மூலிகை தைலாபிஷேகம் மற்றும் மூலிகை லேகியம் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது இங்குள்ள சக்கரத்தாழ்வாரை சுற்றி காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். அதேபோல் அவருக்கு பின்புறம் இடம் பெற்றிருக்கும் நரசிம்மரை சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர்.

இவர்களை தவிர இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், விக்னேஸ்வரர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், சொர்ண பைரவர், ஆஞ்சநேயர் ஆகியோரும் இக்கோயிலில் சன்னதி கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இந்த கோயில் சிற்ப கோயில் என அழைக்கப்படும் அளவுக்கு பிரம்மாண்ட கலை வண்ணங்களுடன் கூடிய சிற்பங்களை காணலாம்.

Also Read: சிவன், பெருமாள் இணைந்த உருவம்.. சங்கரநாராயணர் கோயில் சிறப்புகள்!

பக்தர்களின் நம்பிக்கை

தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் தாயாரான கல்யாண சௌந்தரவல்லி முன்பு விநாயகர், விஷ்ணு துர்க்கை, பதுமநிதி, சங்கநிதி ஆகியோர் நின்ற நிலையில் காட்சி கொடுக்கின்றனர். மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சௌந்தர்ராஜ பெருமாள் கள்ளழகரே இங்கு எழுந்தருளி இருப்பதாக பக்தர்கள் பரவசப்படும் அளவுக்கு அருள்பாலிக்கிறார்.

மதுரையை போல சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார், மேலும்ஒவ்வொரு திருவோணம் நட்சத்திரம் நாளிலும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர் விசேஷ பூஜை நடைபெற்ற தீபம் முன்னே செல்ல உற்சவமூர்த்தி பின்னே வலம் வருகிறார்கள். இந்த தரிசனத்தை கண்டால் பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல்  ஆடி பௌர்ணமி நாளில் இங்கு சுவாமி தேரில் எழுந்தருளுவது வழக்கம்.

இக்கோயிலில் திருமண வரம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, கல்வி ஞானம் ஆகியவைகளுக்காக பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். திருமண தடை உள்ளவர்கள் சௌந்தரவல்லி தாயாருக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து மன்மதன் மற்றும் ரதிக்கு மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் நல்ல வரன் அமையும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு பலன்களை பெறுங்கள்.