Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு வழிபடுவது எப்படி என்பது பற்றிக் காணலாம். இந்நாளில் வீட்டில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து மகிழலாம். அந்த வழிபாட்டு முறைகள் பற்றி நாம் காணலாம்.

Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
கிருஷ்ண ஜெயந்தி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Aug 2025 12:52 PM

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா.. கிருஷ்ணா என்ற வரிகளுக்கு ஏற்ப தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டுபவற்றை கிருஷ்ண பகவான் வழங்குவதாக ஐதீகம் உள்ளது. இந்து மதத்தில் மிகவும் முக்கியமான கடவுள்களில் ஒருவராக அறியப்படுபவர் விஷ்ணு பகவான். இவர் தசாவதாரங்கள் எடுத்து பகைவர்களை அழித்ததாக புராண வரலாறு உள்ளது. அதில் ஒன்பதாவது அவதாரமாக கிருஷ்ணா அவதாரம் உள்ளது. கிருஷ்ணர் வாசுதேவர், வாசுகி தம்பதியினரின் எட்டாவது குழந்தையாவார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ணா பகவான் சிறைச்சாலையில் பிறந்ததாக ஐதீகம் உள்ளது. எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட தான் வருவேன் என்பதற்கு ஏற்ப கிருஷ்ணா பிறப்பு அமைந்துள்ளது. இத்தகைய கிருஷ்ணர் பிறப்பு கோகுலாஷ்டமி, கிருஷ்ணன் ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2025ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி எப்போது?

2025 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆடி மாதத்தின் கடைசி நாளில் வருவது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அந்நாளில் அதிகாலையில் 1:41 மணிக்கு அஷ்டமி திதி தொடங்கி நள்ளிரவு 11:13 மணி வரை உள்ளது. இந்த முறை கார்த்திகை நட்சத்திரங்கள் இணைந்து கிருஷ்ண ஜெயந்தி விழா வரவுள்ளது. இது கிருஷ்ணரின் 5252 வது பிறந்த தினமாக கொண்டாடப்பட உள்ளது. இப்படியான சிறப்பு நாளில் வீட்டில் வழிபடுவது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Also Read: வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!

வீட்டில் வழிபடுவது எப்படி?

கிருஷ்ண ஜெயந்தி சனிக்கிழமை வரும் நிலையில் அதற்கு முந்தைய நாள் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் ஆகஸ்ட் 14ம் தேதி வீட்டையும், பூஜையறையும் சுத்தப்படுத்தி விட வேண்டும். மேலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி கோகுலாஷ்டமி என்பதால் அன்றைய நாளில் கிருஷ்ணருக்கு பிரியமான பலகாரங்கள், வெண்ணெய், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தை கிருஷ்ணர் நம்முடைய வீட்டில் தவழ்ந்து வருவதாக நினைத்து வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை கால் பாதங்களை பச்சரிசி மாவினால் வரைய வேண்டும். பூஜை அறையில் கிருஷ்ணனின் சிலை அல்லது படம் வைத்து வழிபடலாம். பூக்களால் சிலை அல்லது படத்தை அலங்கரித்து பின்னர் பிரசாதங்களை வைத்து கிருஷ்ணருக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் பாடல்கள் ஆகியவற்றை பாடி வழிபடலாம். சிலருக்கு சினிமாவில் வரும் கிருஷ்ணர் பாடல்கள் நினைவுக்கு வரலாம். அதையும் தாராளமாக பாடி வழிபடலாம்.

Also Read: வாஸ்து சாஸ்திரம்: வீட்டின் சமையலறை எந்த திசையில் இருக்க வேண்டும்?

எதுவும் தெரியவில்லை என்றால் “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண ஹரே ஹரே” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடுவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. வழிபாடு முடிந்த பின்னர் வீட்டில் படைத்த பிரசாதங்களை அருகில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சாப்பிட கொடுத்து மகிழலாம். குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் கிருஷ்ணரே நம்முடைய வீட்டில் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதாக அர்த்தமாகும்.

மேலும் இந்நாளை சிறப்பிக்கும் பொருட்டு வீட்டில் இருக்கும் சிறிய ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அல்லது ராதை வேடமிட்டு அழகு படுத்தி மகிழலாம்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)