Navratri: நவராத்திரி தொடங்கும் முன் வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய பொருட்கள்!
Navratri 2025 Rituals: 2025 ஆம் ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நவராத்திரியின் முக்கியத்துவம் மற்றும் அதற்கு முன் வீட்டிற்கு கொண்டுவர வேண்டிய மங்களகரமான பொருட்கள்பற்றியும், அகற்ற வேண்டிய பொருட்கள் பற்றியும் நாம் விளக்கமாக காணலாம்.

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே நவராத்திரி பண்டிகை தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அத்தகைய நவராத்திரி பண்டிகை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்படுகிறது. சித்திரை – வைகாசி மாதத்தில் சைத்ர நவராத்திரி, ஆனி – ஆடி மாதத்தில் குப்த நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் ஷரதிய நவராத்திரி, மார்கழி மாதத்தில் மகா நவராத்திரி ஆகியவை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நான்கில், புரட்டாசியில் வரும் ஷரதிய நவராத்திரி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் மிகுந்த ஆடம்பரமாகவும், விமரிசையாகவும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது 9 நாட்கள் துர்க்கை தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகின்றன. நவராத்திரியின் போது விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், துர்க்கை தேவி நமக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கைக்கு தேவையானவற்றையும் அளிக்கிறார் என்பது ஐதீகமாக உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, துர்க்கை தேவிக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படும் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாக சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்தால், துர்க்கையின் ஆசிகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிப் பார்க்கலாம்.
2025 நவராத்திரி விழா எப்போது?
2025 ஆம் ஆண்டு நவராத்திரி விழா செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நவராத்திரியின் 9 நாட்களில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி, இரண்டாவது மூன்று நாட்கள் சரஸ்வதி, கடைசி மூன்று நாட்கள் துர்க்கை ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அப்படியான நவராத்திரிக்கு முன் சில பொருட்களை வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
Also Read: தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!
நவராத்திரிக்கு முன் கொண்டு வரவேண்டிய பொருட்கள்
நவராத்திரி தொடங்குவதற்கு முன், ஒரு வெள்ளி நாணயத்தை கொண்டு வரலாம். வெள்ளி லட்சுமி தேவியின் சின்னமாகக் கருதப்படுகிறது. நவராத்திரியின் போது வெள்ளி நாணயத்தைக் கொண்டு வருவது வீட்டிற்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது. அதேபோல் களிமண், பித்தளை, வெள்ளி அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட கலசத்தை வீட்டிற்குள் கொண்டு வருவது மங்களகரமானது. இது நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.
நவராத்திரியின் போது உங்கள் வீட்டிற்குள் ஒரு துர்கா தேவி சிலை அல்லது படத்தை கொண்டு வருவது மங்களகரமானதாக பார்க்கபப்டுகிறது. பூஜை அறையில் துர்கா தேவி சிலையை நிறுவுவது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டும் என சொல்லப்படுகிறது. இது வாஸ்து குறைபாடுகளை நீக்குவதாகவும் நம்பப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, நவராத்திரிக்கு முன் வீட்டிற்குள் ஸ்ரீ யந்திரத்தை கொண்டு வருவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் நவராத்திரிக்கு முன் 16 அலங்காரப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வந்து துர்கா தேவிக்கு சமர்ப்பிப்பதன் மூலம் பெண்கள் சிறப்புப் பலன்களைப் பெற முடியும் என சொல்லப்படுகிறது. இதனால் நீண்ட கால சுமங்கலி பெண்ணாக வாழும் பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Also Read: ஒரு எலுமிச்சை போதும்.. வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை தீருமா?
வீட்டில் அகற்ற வேண்டிய பொருட்கள்
நவராத்திரி தொடங்குவதற்கு முன் வீட்டிலிருந்து சேதமடைந்த காலணிகள், உடைந்த கண்ணாடி பாத்திரங்கள், பழைய, உடைந்த பிற பொருட்களையும் வீட்டிலிருந்து அகற்ற வேண்டும். அதேபோல் நவராத்திரியின் போது முடி அல்லது நகங்களை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு இவற்றைச் செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(சாஸ்திர மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)