Lord Vinayagar: தலையாட்டி விநாயகர்.. இந்த கோயில் எங்கிருக்கு தெரியுமா?
Famous Vinayagar Temple: கெட்டி முதலி என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்ட சிவ கோயில் ஒன்று, விநாயகரின் அருளால் கட்டப்பட்டது. விநாயகர் தனது தலையை ஆட்டியதால் தலையாட்டி விநாயகர் என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது திருமணத் தடை, புத்திரப் பேறு, கிரக தோஷம் நீங்க இங்கு வழிபடுகின்றனர்.

தலையாட்டி விநாயகர்
இந்து மதத்தில் விநாயகர் முழுமுதற் கடவுளாக அறியப்படுகிறார். இவருக்கு திரும்பும் திசை எங்கும் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு கோயில்கள் உள்ளது. அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. விநாயகரை வணங்கிவிட்டு நாம் எந்த காரியம் செய்தாலும் அது தடையில்லாமல் நடைபெறும் என்பதை நம்பிக்கையாக உள்ளது. இப்படியான விநாயகர் பல்வேறு பெயர்கள், பல்வேறு உருவங்களில், கோயில்களில் அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் காவல் கணபதியாக அறியப்படும் தலையாட்டி விநாயகர் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம் .
இந்த கோயிலானது சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைந்துள்ளது இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கோயிலின் வரலாறு
கோயிலின் வரலாறு வசிஷ்ட முனிவர் ஒருமுறை சிவ தல யாத்திரை சென்ற போது வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்வாறு தவம் செய்யும் இடங்களில் எல்லாம் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சிவன் அருள் பெற்றார். அப்படியாக அவர் இந்த கோயில் அமைந்திருக்கும் இடத்தில் தவம் செய்த போது தனக்கு சிவபெருமான் திருவண்ணாமலை ஜோதி வடிவில் காட்சி தர வேண்டும் என விரும்பினார்.
Also Read: Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!
அதன்படி அவர் விருப்பத்தை ஏற்ற ஈசன், பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஜோதி வடிவமாக அமர்ந்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணிற்குள் புதைந்தது. இதன் பின்னர் கெட்டி முதலி என்னும் குறுநில மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவன் தினமும் சிவனை வணங்கிய பிறகு எந்த ஒரு செயலையும் செய்வான். ஒருமுறை அவன் கனவில் தோன்றிய சிவபெருமான் தான் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்ப வேண்டும் என கூறினார்.
அதன் பின்னர் மன்னன் இவ்விடத்தை தோண்டி லிங்கத்தை வெளியில் எடுத்து, அருகில் கிடைத்த புதையலையும் வைத்து கோயிலை கட்டினான். அவ்வாறு மன்னன் கோயிலை கட்டும்போது விநாயகரிடம் உத்தரவு கேட்டு பணியை தொடங்கினான். இவரை கோயில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். இந்நாளில் கோயில் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விநாயகரிடம் வந்து பணிகள் எல்லாம் சிறப்பாய் முடித்திருக்கிறேனா என கேட்டான்.
Also Read: Saneeswaran Temple: சனி தோஷத்தால் அவதியா? – இந்த 21 அடி சனீஸ்வரர் கோயில் போங்க!
அதற்கு அவனுக்கு காட்சி கொடுக்க விநாயகர் நன்றாக இருக்கிறது என சொல்லும் விதமாக தனது தலையை இடது பக்கமாக ஆட்டினாராம். அதனால் இவர் தலையாட்டி விநாயகர் என அழைக்கப்படுகிறார் . கருவறையில் விநாயகர் இடது தலையை ஆட்டியபடி இருப்பது போல காட்சி கொடுப்பது சிறப்பான ஒன்றாகும்.
இந்த கோயிலில் திருமண தடை ,புத்திரப்பேறு, கிரக தோஷம் நீங்க வழிபடுகிறார்கள். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். வாய்ப்பு கிடைத்தவர்கள் ஒரு முறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் இதற்கு பொறுப்பேற்காது)