நிறம் மாறும் விநாயகர்.. இந்த கோயில் தமிழ்நாட்டில் எங்கு இருக்கு தெரியுமா?
Ganesh Chaturthi 2025: கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீ மகாதேவர் கோயிலில் அமைந்துள்ள விநாயகர் சிலை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது. மார்ச் முதல் ஜூன் வரை கருப்பு, ஜூலை முதல் பிப்ரவரி வரை வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது. இந்த நிற மாற்றம் விநாயகர் மகத்துவத்தின் அடையாளம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்து மதத்தில் விநாயகர் முழு முதற்கடவுளாக அறியப்படுகிறார். அவரை வணங்காமல் நாம் எந்தவொரு செயலையும் செய்வதில்லை. விநாயகர் தடைகளை நீக்குபவர் என்பதால் நாம் அவருக்கு வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். அப்படியான விநாயகப்பெருமான் அவதரித்த தினமாக விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இப்படியான நிலையில் நம் இந்திய நாட்டில் எண்ணற்ற சிறிய மற்றும் பெரிய விநாயகர் கோயில்கள் திரும்பும் திசையெங்கும் அமைந்திருக்கிறது. இவற்றில் சில கோயில் பல சிறப்புகள் கொண்டவையாக இருக்கும். அதில் நிறம் மாறும் விநாயகர் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாட்டில் நிறம் மாறும் விநாயகர்
ஆம். அந்த கோயில் தமிழ்நாட்டில் தான் உள்ளது. இந்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமாக அறியப்படும் கன்னியாகுமரியில் தான் அந்த நிறம் மாறும் விநாயகர் உள்ளார். கேரளபுரத்தில் உள்ள ஸ்ரீ மகாதேவா கோயிலின் திறந்தவெளியில் ஒரு அரச மரத்தின் கீழ் தான் நிறம் மாறும் விநாயகர் சிலை அமைந்துள்ளது. இந்த கோயில் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதன் சிறப்புக்காகவே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
Also Read: Ganesh Chaturthi: வீட்டில் விநாயகர் சிலை வைக்க போறீங்களா? – பின்பற்ற வேண்டிய விதிகள்!
இந்த கோயிலில் விநாயகர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தனது நிறத்தை மாற்றுகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு நிறத்திலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு மற்றொரு நிறத்திலும் இருப்பார். இந்த சிலையானது 2300 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.தமிழ் நாட்காட்டியின்படி, மாசி மாதம் முதல் ஆனி மாதம் வரை (மார்ச் முதல் ஜூன் வரை) விநாயகர் கருப்பு நிறத்தில் காட்சியளிப்பார். ஆடி மாதம் முதல் தை மாதம் வரை (ஜூலை முதல் பிப்ரவரி வரை) வெள்ளை நிறத்தில் காட்சிக்கொடுப்பார்.
பின்னணி காரணம் என்ன?
மார்ச் மாதத்தில் வெயில் காலம் தொடங்கும் போது, விநாயகர் மீது சிறிய கருப்பு புள்ளிகள் தோன்றத் தொடங்குகின்றன. இதனால் அவர் படிப்படியாகக் கருப்பாக மாறுகிறார். அதுவே ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் வரும்போது, விநாயகர் படிப்படியாகக் கருப்பாக இருந்து வெள்ளை நிறமாக மாறுகிறார். இந்த நிறமாற்றம் விநாயகரின் மகத்துவம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நிறத்தை மாற்றும் இந்த விநாயகரைக் கண்டால், நம் வாழ்க்கையிலும் ஒரு அதிசயம் நடக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
நிறம் மாறும் நீர்
அதுமட்டுமல்லாமல் இந்தக் கோயிலின் மற்றொரு அதிசயமாக இங்குள்ள கிணற்றில் உள்ள நீரும் நிறம் மாறி காணப்படுகிறது. விநாயகர் வெண்மையாக இருந்தால், கிணற்றில் உள்ள நீர் கருப்பாக இருக்கும் என்றும், விநாயகர் கருப்பு நிறத்தில் இருந்தால், கிணற்றில் உள்ள நீர் தெளிவாகவும் வெண்மையாகவும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயில் 1317 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Also Read: Ganesh Chaturthi: விநாயகருக்கு உகந்த 21 இலை, மலர் வழிபாடு!
இந்தக் கோயிலின் முற்றத்தில் ஒரு சிவன் கோயில் உள்ள நிலையில் ஸ்ரீ மகாதேவர் அதிசய விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த அற்புதமான விநாயகர் சிலையை திருவிதாங்கூர் மன்னர் கேரளவர்மன் தம்புரான் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடியபோது கண்டெடுத்தார் என கூறப்படுகிறது. நீங்களும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களுக்கு அறிவியல் விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பில்லை)