பெருமாள் கோயிலில் நந்தி சிலை.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?
Famous Perumal Temple in Tamilnadu: பழமையான ஓசூர் வெங்கடேஸ்வர சுவாமி கோயிலைப் பொறுத்தவரை, கோட்டகுட்டா கிராமத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலை, தற்போது மலையில் அமைந்துள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 முதல் 11 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

விஷ்ணு பகவான் இந்து மதத்தில் வைணவர்களால் வழிபடக்கூடிய முதன்மை தெய்வமாக உள்ளார். எங்கெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு பல்வேறு அவதாரங்களை எடுத்தவர் என்பது ஐதீகமாக உள்ளது. விஷ்ணு பகவான் பெருமாள், திருமால், தாமோதரன், பத்மநாபன், கோவிந்தன், ஹரி, நாராயணர் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயிலானது தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கோபசந்திரம் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது.
கோயில் உருவான வரலாறு
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியை விஜயநகர பேரரசர்கள் ஆண்டு வந்தனர். அப்போது ஓசூரில் இருந்து சரியாக 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோட்ட குட்டா என்ற கிராமத்தில் ஆடு மேய்த்து வந்த இரண்டு சகோதரர்கள் பெருமாள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார்கள். வறுமையில் அவர்கள் வாடினாலும் ஆண்டுக்கு இருமுறை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க தவறாமல் இருந்தனர். அவர்களின் பக்தியைக் கண்டு மெய்சிலித்த நிலையில் ஒருநாள் இவர்களின் கனவில் பெருமாள் தோன்றினார்.
இதையும் படிங்க: முன் செய்த பாவங்களை போக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்!




நான் தென்பெண்ணை நதிக்கரையில் சிலை வடிவில் இருக்கிறேன். என்னை எடுத்துச் சென்று வழிபடுங்கள் என கூறினார். இதனைத் தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட நதிக்கரைக்கு சென்று அங்கிருந்த பெருமாளின் சிலையை எடுத்து ஒரு மாட்டு கொட்டகையில் வைத்து வழிபட்டு வந்தனர். காலங்கள் ஓடியது. பின்னர் ஒரு கட்டத்தில் கோட்ட குட்டா கிராமத்தை காலரா நோய் தாக்கியதில் அந்த கிராமமே அழிந்துவிட்டது.
பல ஆண்டுகளுக்கு பின்னர் சிலை வைத்து வழிபட்ட இடத்தில் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. அப்படியாக மாட்டுச் சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள் மறைந்திருந்த வெங்கடேஸ்வர சுவாமியின் சிலையை கண்டு தினமும் அங்கு சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதனை கண்ட மாட்டுக்கு சொந்தக்காரர் வெங்கட் ரமணப்பா 1878 ஆம் ஆண்டு இந்த சிலையை தற்போது கோயில் அமைந்திருக்கும் மலை மீது வைத்து சிறிய அளவில் கோயில் கட்டி வழிபட்டார்.
இதையும் படிங்க: ஒரே இடத்தில் காசி, ராமேஸ்வரம் சென்ற பலன்.. இந்த கோயில் தெரியுமா?
பெருமாள் கோயிலில் நந்திக்கு சிலை
பின்னர் 1888 ஆம் ஆண்டு இந்த கோயிலில் தேர் திருவிழா நடத்த கமிட்டி அமைக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை வருடப்பிறப்புக்கு முதல் நாள் தேர் திருவிழா நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இந்த வெங்கடேஸ்வர சுவாமி சிலையை மாடு கண்டுபிடித்ததால் இந்த கோயிலில் நந்திக்கு சிலை அமைக்கப்பட்டு வழிபடும் வழக்கம் உள்ளது.
பெருமாள் கோயிலில் நந்தி சிலை வைத்து வழிபடும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமியை தரிசிக்க தேன்கனிக்கோட்டை, ஓசூர் போன்ற உள்ளூர் பகுதி மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா என வெளி மாநில மக்களும் வந்து செல்கின்றனர்.
மேலும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் இந்த பெருமாள் குலதெய்வமாகவும் திகழ்கிறார். மலை மீது அமர்ந்திருக்கும் இந்த கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளுக்கு விசேஷ சக்தி இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. அதனால் தங்களுடைய வீடுகளில் காணாமல் போன பொருட்கள் பற்றி முறையிட்டால் விரைந்து கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த கோயிலில் . பெருமாளுக்குரிய அனைத்து வழிபாடுகளும் மிகச் சிறப்பாக நடைபெறும். வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)