Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dharmapuri: முன் செய்த பாவங்களை போக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்!

Tamilnadu Temple Series: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் வரலாறு, ராமரின் சிவபூஜை தொடர்புடைய வரலாறு கொண்டது. ஐந்து வகையான புனித தீர்த்தங்களின் சிறப்புகள், அவற்றின் மருத்துவ குணங்கள் மற்றும் நம்பிக்கைகள் இக்கோயிலின் சிறப்பாகும். மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும் இக்கோயில் சிறந்ததாக கருதப்படுகிறது.

Dharmapuri: முன் செய்த பாவங்களை போக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில்!
தீர்த்தமலை கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 10 Sep 2025 20:30 PM IST

தமிழ்நாடு முழுவதும் திரும்பும் திசையெங்கும் பல்வேறு விதமான கோயில்கள் உள்ளது. பல்வேறு விதமான கடவுள்கள் அருள்பாலித்து வரும் இந்த ஒவ்வொரு தலத்திற்கும் வரலாறு என்பது வெவ்வேறாக உள்ளது. இப்படியான நிலையில் தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் அருள்பாலித்து வரும் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், மாலையில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

ராவணனை வதம் செய்த ராமர் அயோத்தி நோக்கி திரும்பும் போது வழியில் தற்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் சிவ பூஜை செய்ய விரும்பினார். அந்த பூஜைக்கு காசியில் இருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமன் தாமதித்தான். அவன் தீர்த்தம் எடுத்து வர தாமதமானதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அந்த இடத்திலிருந்து தீர்த்தம் வந்ததால் அது ராமர் தீர்த்தம் என பெயர் பெற்றது.

மேலும் ஆஞ்சநேயர் தாமதமாக எடுத்து வந்த தீர்த்தத்தை ராமர் வீசிய அது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் விழுந்தது. அந்த இடம் அனுமந்த தீர்த்தம் என பெயர் பெற்றது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்துவிட்டு இந்த கோயிலில் உள்ள ராமர் தீர்த்தத்தில் குளித்தால் முன் செய்த பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

Also Read: திருமால் வழிபட்ட தலம்.. இந்த சிவன் கோயில் தெரியுமா?

கோயிலின் சிறப்புகள்

சிவபெருமானை நினைத்து தமிழ்நாட்டில் ராமர் இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்து உள்ளார். அதில் ஒன்று ராமேஸ்வரம், மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். அற்புதமான மூலிகைகள் கலந்து விளங்குவதால் இந்த கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்கள் பக்தர்களின் உடற்பிணி, மனதில் எழுந்துள்ள கவலைகள் ஆகியவற்றை தீர்த்து புத்துணர்ச்சியும் புது வாழ்வும் அளிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் ராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் என ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளது. இதில் ராமர் தீர்த்தத்தில் ராமஜெயம் என உச்சரித்துக் கொண்டே மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. அதைபோல தேவசேனாதிபதியாக முருகனை நியமித்த போது அவருக்கு இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் இது குமார தீர்த்தம் என பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த தீர்த்தத்தை தெளித்து கொள்வதாலும், பருகுவதாலும் வாழ்க்கையில் உயர்வும் ஞானமும் பெருகும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அன்னை வடிவாம்பிகை இந்த தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்தால் அவரை மணக்கும் பாக்கியம் பெற்றார். இதனைக் கொண்டு அம்மையப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். மேலும் இல்லறம் நல்லறமாக இருக்க கௌரி தீர்த்தத்தால் அம்மையப்பரை வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.

Also Read:  திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!

தாமிர சக்தியும், மூலிகைகளின் சக்தியும் கொண்ட அகஸ்தியர் தீர்த்தத்தை குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் உடலின் தட்பவெப்பம் சமமாகவும்,  அடிக்கடி சளி பிடித்தல் குணமாகவும், அக்னி தேவனின் பெண் ஆசையால் ஏற்பட்ட பாவங்களை போக்கிய தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடினால் போதுமானது என நம்பப்படுகிறது.

திருவிழாக்கள் மற்றும் பிற விஷயங்கள்

இந்தக் கோயிலில் உள்ள தீர்த்தகிரீஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் குணமாகும். குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றிற்காகவும் பக்தர்கள் பெரும்பாலும் பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் கடன் தொல்லை தீர, கல்வியில் வளர, திருமண தடை நீங்க, கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். தீர்த்தமலைக்கு மேற்கு பக்கத்தில் வாயு தீர்த்தமும் வர்ண தீர்த்தமும் அமைந்துள்ளது.

கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கே அனுமந்த தீர்த்தமும் உள்ளது. தெற்கில் எம தீர்த்தம் உள்ளது. மலை உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் இருக்கிறது. இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புத மலைக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள். இந்தக் கோயிலில் மாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெறும் அது மட்டுமல்லாமல் பௌர்ணமி நாளன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.