புரட்டாசி 2ஆம் சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த தினங்களாக அறியப்படுகிறது. இந்நாளில் விரதம், அதிகாலை நீராடல், வீட்டு சுத்தம், பெருமாள் வழிபாடு, விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதுதல், கோவில் வழிபாடு ஆகியவை நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் கிரக தோஷம் நீங்கி, சுபகாரிய தடைகள் விலகும் என்பது ஐதீகமாகும்.

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே வைணவ சமயத்தாருக்கு மட்டுமின்றி விஷ்ணு பகவானை வழிபடும் பக்தர்களுக்கு மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி வந்து விடும். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இம்மாதம் என்பது இந்து மதத்தில் ஆன்மிக மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனால் தான் எந்தவித சுபகாரியங்கள் இருந்தாலும் அதனை தவிர்த்து விட்டு மனம் முழுக்க இறை சிந்தனை இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இத்தகைய புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம் வாய்ந்தவை. இந்நாளில் நாம் விரதம் இருந்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் கிடைக்கும் பலன்களுக்கு அளவில்லை என சொல்லப்படுகிறது. அப்படியான புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை வரும் 2025, செப்டம்பர் 27ஆம் தேதி வருகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம்
புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் வீட்டை சுத்தம் செய்து வாசலில் காவி நிறம் கலந்த மாக்கோலம் இட வேண்டும். இதன்பிறகு பூஜை அறையில் பெருமாளின் படம் வைக்கும் இடத்தில் சிறிய கோலம் ஒன்றையிட்டு பெருமாள் படத்தை வைத்து அவற்றிற்கு பல வண்ண மலர்கள் சாற்றி அலங்கரிக்க வேண்டும்.
Also Read: பெருமாள் கோயிலில் நந்தி சிலை.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?
பின்னர் தீப தூபம் காட்டி வழிபாடு முடிந்து விரதத்தை தொடங்க வேண்டும். இந்த வழிபாட்டின் போது ஒரு செம்பில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலை போட்டு வைக்க வேண்டும். அதனை சிறிதளவு அருந்தி விரதத்தை தொடங்கலாம். காலை முதல் மாலை வரை விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பெருமாளுக்குரிய பாடல்கள், கதைகள் ஆகியவற்றை படிக்கலாம்.
மதிய நேரத்தில் முடிந்தவர்கள் உணவருந்தாமல் விரதத்தை தொடலாம். முடியாதவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். வசதி படைத்தவர்கள் இந்நாளில் கோயிலில் அன்னதானம் செய்யலாம். கோயில்ச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே ஏதேனும் உணவை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் செம்பில் வைக்கப்பட்ட துளசி தண்ணீரை பருகி விரதம் முடிக்கலாம்.
Also Read: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
மீதமுள்ள நீரை அருகிலுள்ள மரம்,செடிகளில் வேர்களில் ஊற்றி விடலாம். இப்படியாக புரட்டாசி விரதம் இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்குவதோடு மட்டுமல்லாமல் திருமண தடை, சுப காரியங்களுக்கான தடை ஆகியவை விலகும். மேலும் குடும்பத்தில் கிரக தோஷம் இருந்தால் அவை அகலும் என நம்பப்படுகிறது. புரட்டாசி விரதம் இருப்பவர்கள் நிச்சயமாக பெருமாளுக்குரிய தளிகை உணவிட்டு வழிபட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதனை செய்வதால் கர்ம வினைகள் அகலும் என்பது நம்பிக்கையாகும்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை.அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)