நவராத்திரி கொலு வைக்கப் போறீங்களா? – இதை கொஞ்சம் கவனிங்க!
புரட்டாசி மாத நவராத்திரியில் கொலு அமைப்பது மிகவும் முக்கியம். மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது படிகள் கொண்ட கொலுவில், ஒவ்வொரு படியிலும் உயிர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பொம்மைகள் அமைக்க வேண்டும். தாவரங்கள், ஊர்வன, பறவைகள், மனிதர்கள், தேவர்கள் என வரிசைப்படுத்தி அமைக்கலாம்.

புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றுதான் நவராத்திரி திருவிழா. அலைமகள், கலைமகள், மலைமகள் என லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையம்மன் ஆகிய முத்தேவியரையும் கொண்டாடும் ஒரு திருவிழாவாக இது பார்க்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் இந்த மூன்று தெய்வங்களுக்கும் தலா மூன்று நாட்கள் என பிரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை அடிப்படையில் அன்னையின் அருள் வேண்டி வழிபாடு செய்வதை நவராத்திரி கொண்டாட்டமாகும். அப்படியான நவராத்திரியின் மிக சிறப்பான தருணங்களில் ஒன்றாக கொலு கண்காட்சி பார்க்கப்படுகிறது.
கொலு கண்காட்சி வைக்கும் முறை
வீடுகள், ஆலயங்கள் என பல்வேறு இடங்களிலும் விதவிதமான பொம்மைகள் கொண்டு இந்த கொலு வைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் வசதிப்படி மூன்று தேவிகளையும் குறிக்கும் விதமாக மூன்று, ஐந்து ,ஏழு, ஒன்பது படிகளை அமைப்பார்கள். ஐந்து படிகள் சக்தியின் சக்கரத்தை குறிக்கும் நிலையில், ஏழு படிகள் சப்த கன்னிமார்களை அடையாளப்படுத்துகிறது. அதேபோல் 9 படிகள் நவகிரகங்களையும் குறிக்கும்.
இதையும் படிங்க: நவராத்திரியில் அரிய யோகங்கள்.. 3 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் துர்கா தேவி




பொதுவாக கொலுப் படிகள் அமைப்பவர்கள் முதலில் கீழ் படியிலிருந்து தான் தொடங்க வேண்டும். அதன்படி விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் வைத்த பிறகே மற்ற பொம்மைகளை வைக்கத் தொடங்க வேண்டும்.
எந்த படியில் என்னென்ன வைக்கலாம்?
உயிர்களின் அறிவின் அடிப்படையில் பொம்மைகளின் வரிசை அமைய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி முதல் படியில் ஓரறிவு உடைய உயிரினமான செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இடம் பெற வேண்டும். தோட்டத்தில் இருப்பது போன்ற காட்சிகளை உருவகப்படுத்தலாம். இரண்டாம் படியில் இரண்டறிவு உடைய நத்தை, சங்கு போன்ற ஊர்வன உயிரின பொம்மைகள் ஆகியவை வைக்கலாம்.
மூன்றாம் படியில் எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளை வைக்கலாம். நான்காவது படியில் வண்டு, நண்டு போன்ற பொம்மைகளை அடுக்கலாம். ஐந்தாவது படியில் நான்கு கால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஆறாவது படியில் ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஏழாவது படியில் மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகளை அடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: கைகொடுக்கும் நவராத்திரி.. இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்ட மழை!
எட்டாம் படியில் தேவர்கள், நவக்கிரக கடவுள்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். ஒன்பதாம் படியில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய பெண் தெய்வங்கள் இருக்க வேண்டும். மேலும் நம்முடைய வாழ்க்கையை உணர்த்தும் வகையிலான பொம்மைகளையும் கொலு கண்காட்சியில் வைக்கலாம். மேலும் 9 நாட்களும் இந்த கொலு வழிபாட்டை காண மற்றவர்களை அழைக்க வேண்டும். மேலும் சிறப்பு வழிபாடு, பிரசாதம் ஆகியவை வைத்து வணங்கினால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)