Kulasekaranpatinam: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!
Kulasekaranpatinam Dussehra 2025: குலசேகரப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட கொடியேற்ற விழாவிற்கு முன்னர் காளி பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

தூத்துக்குடி, செப்டம்பர் 23: உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புரட்டாசி மாதம் தொடங்கி விட்டாலே நவராத்திரி திருவிழா தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 10ஆம் நாளில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்திருக்கும் குலசேகரப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் தான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் மைசூரில் 2025, செப்டம்பர் 22 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனையடுத்து குலசேகரப்பட்டினத்தில் இன்று (செப்டம்பர் 23) கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா
குலசேகரபட்டினத்தில் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ளனர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனை வழிபடுவார்கள். அந்த வகையில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 22) காலை 11 மணிக்கு காளி பூஜையும், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனையும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு வில்லிசை நடந்தது.
Also Read: மைசூர் தசரா திருவிழா.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
விமரிசையாக நடந்த கொடியேற்றம்
தொடர்ந்து கொடிப்பட்டம் ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாரதனை காட்டப்பட்டது. இதற்கிடையில் விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். அவர்கள் இந்த காப்புகளை வாங்கிச் சென்று தங்கள் ஊரில் விரதம் தொடங்கும் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
இந்த 10 நாட்களும் காப்பு அணிந்து மாலை அணிவித்து விரதம் இருக்கும் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து பல ஊர்களுக்கும் சென்று காணிக்கை வசூலித்து 10ம் நாள் தசரா திருவிழாவின் போது அவற்றை கோயிலில் செலுத்துவார்கள். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையும் முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தினமும் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
Also Read: திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இத்தனை சிறப்புகளா?
பல்வேறு திருக்கோலத்தில் முத்தாரம்மன்
அதன்படி சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்திலும், கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும், ரிஷப வாகனத்தில் பார்வதி தோற்றத்திலும், மயில் வாகனத்தில் முருகன் திருக்கோலத்திலும், காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் அலங்காரமும் முத்தாரம்மனுக்கு செய்யப்பட்டு இருக்கும்.
அதேபோல் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், பஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜராகவும், கமல வாகனத்தில் கஜலட்சுமியாகவும், அன்னவாகனத்தில் கலைமகளாகவும் அவர் இந்த பத்து நாட்களும் காட்சி தருவார்.
பத்தாம் நாளான அக்டோபர் 2ம் தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். தொடர்ந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) மாலையில் முத்தாரம்மன் தேர் பவனி கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு கலைந்து தங்கள் விரதத்தை முடிப்பார்கள். அக்டோபர் 4ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.