2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி எப்போது? – அதன் சிறப்புகள் இதோ!
சித்ரா பௌர்ணமி, இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பண்டிகையாகும். சித்திரை மாத பௌர்ணமியான இந்நாள், சித்ரகுப்தன் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வழிபாடு செய்வதால் பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த விசேஷ தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், வீடுகளில் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும்.

பொதுவாக இந்து மதத்தில் வருடம் 365 நாட்களும் ஆன்மீகம் சார்ந்த பல்வேறு விசேஷ தினங்களாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். அது அஷ்டமி, நவமி திதியாக இருந்தாலும் சரி, அமாவாசை, பௌர்ணமி திதியாக இருந்தாலும் சரி ஏதேனும் ஒரு மாதத்தில் அந்த திதி அதற்கான உரிய சிறப்பான வழிபாடுகளுடன் கொண்டாடப்படும். அப்படியாக மாதம்தோறும் பௌர்ணமி திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அனைவராலும் சித்ரா பௌர்ணமி (Chitra Pournami) என அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் சைவ சமயத்தை பின்பற்றும் மக்களால் இந்நாள் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எமலோகத்தில் எமதர்மராஜாவின் உதவியாளராக அறியப்படும், மனிதர்களின் பாவம் மற்றும் புண்ணிய காரியங்களை பதிவு செய்பவராக சொல்லப்படும் சித்ரகுப்தனின் (Chitragupthan) பிறந்தநாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் நாம் சித்ரகுப்தனை வழிபட்டால் அவர் நம் பாவக்கணக்குகளை குறைத்து நற்செயல்களின் கணக்குகளை அதிகமாகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் விசேஷ வழிபாடானது செய்யப்படுகிறது. அதேசமயம் இந்த தினத்தில் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, பண்பாட்டு ரீதியாகவும் இந்நாள் பார்க்கப்படுகிறது.
2025ல் சித்ரா பௌர்ணமி எப்போது?
2025 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி சித்திரை மாதம் 29 ஆம் நாள் அதாவது மே 12 ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சித்ரா பௌர்ணமி நாளில் கங்கை நதியில் நீராடுவது மிகுந்த புண்ணியமாக பார்க்கப்படுகிறது. அப்படி அங்கு செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள நீர் நிலைகளில் நீராடி வழிபாடு மேற்கொள்ளலாம். இந்த நாள் நம் வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு வளர்ச்சிகளுக்கு வித்திடும் நாளாக பார்க்கப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று குன்று அல்லது மலை மீது இருக்கும் சிவன் கோயில்களில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். இது மிகவும் விசேஷமானது. இந்நாளில் கிரிவலம் சென்றால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி தெளிவு கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
மேலும் நம்முடைய செயல்களை கண்டு இறைவன் நிகழ்ந்து வேண்டுதல்களை எல்லாம் விரைந்து நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது. சித்ரா பௌர்ணமி விழா தொடர்பாக திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டை விநாயகர் கோயில் கல்வெட்டுகளிலும், நெடுங்காலதர் கோயில் கல்வெட்டுகளிலும் குறிப்புகள் இடம்பெற்று இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் வைணவ சமயத்தில் இந்த நாள் நயினார் நோன்பு என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கோயில்களில் சித்திரை கஞ்சி என்ற சமைக்கும் நிகழ்வு நடைபெறும். பௌர்ணமி நாளில் முழு நிலவு வெளிச்சத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏதேனும் நதி கரையில் அமர்ந்து உரையாடி உண்பது தான் பழங்காலம் தொட்டு வழக்கமாக உள்ளது. இதனை இந்நாளில் பலரும் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள்.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல் விளக்கமும், ஆதாரமும் இல்லை)