Saraswati puja: சரஸ்வதி பூஜை.. வீட்டில் வழிபாடு மேற்கொள்வது எப்படி?
2025 அக்டோபர் 1 அன்று வரும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, ஞானம், தொழில் வளர்ச்சிக்குரிய இப்புனித நாளில், வீட்டைச் சுத்தம் செய்து, பாடப்புத்தகங்கள், கணக்குப் புத்தகங்கள் வைத்து, வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்து மதத்தில் சரஸ்வதி அன்னை கல்வி மற்றும் ஞானத்தின் அதிபதியாக வழிபடப்படுகிறார். நவராத்திரி விழாவின் அங்கமான ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்பது மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறை நவமி நாளில் இந்த சிறப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வரும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை பண்டிகை வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் ஞானத்தின் வளர்ச்சி வேண்டி சரஸ்வதி பூஜையும், தொழில் செய்பவர்கள் லாப வளர்ச்சி வேண்டி ஆயுத பூஜையும் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் வீட்டில் சரஸ்வதி பூஜை நாளில் நாம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றிக் காணலாம்.
வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
சரஸ்வதி சிவபெருமானிடம் இருந்து வெளிப்படும் ஞானப் பெண் என சிறப்பிக்கப்படுகிறார். அதனால்தான் அவள் சிவபெருமான் போல ஜடாமகுடம் தரித்து அதில் பிறை சந்திரனை சூடியிருப்பதாக புராணங்கள் தெரிவிக்கிறது. போற்றப்படும் சரஸ்வதி பிரம்மனின் நாவில் குடியிருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்த சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
நவராத்திரி நாளில் நவமி வீதியில் வரும் சரஸ்வதி பூஜை அன்று அன்னையை வழிபட்டால் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கலாம் என நியான நூல்கள் தெரிவிக்கிறது இந்த நாளில் நாம் பூஜை அறையில் கலசம் வைத்து சரஸ்வதி தேதியை நினைத்து வழிபட்டு அதற்கான பலன்களை பெறலாம் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
அதன்படி சரஸ்வதி பூஜைக்கு முதல் நாள் பூஜை அறை மட்டும் அல்லாமல் வீட்டு முழுவதையும் சுத்தப்படுத்தி தேவையான இடங்களில் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் முடியாதவர்கள் குறைந்தபட்சம் நிலை வாசல் மற்றும் பூஜை அறையிலாவது கோலமிட வேண்டும்.
பின்னர் சரஸ்வதி பூஜை நாளில் அதிகாலையில் இருந்து புனித நீராடிய பிறகு வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் பாடப்புத்தகர்களை அடுக்கி மேடை அமைக்க வேண்டும். அதேபோல் வீட்டின் கணக்கு வழக்கு புத்தகங்கள் , வங்கி பாஸ்புக், இருந்தாலும் அதனையும் வைக்கலாம். அதன்மீது வெண் பட்டு துணி அல்லது வீட்டில் பயன்படுத்தப்படாத புது துணி இருந்தால் அதனை விரிக்கலாம்.
இதன்மேலே சரஸ்வதி தேவியின் புகைப்படம் அல்லது சிலை இருந்தால் வைக்க வேண்டும். அதற்கு குங்குமம், சந்தனம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் முன்னால் ஒரு செம்பில் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை பொருட்கள் அல்லது திரவியம் சேர்த்து அதன்மேல் மாவிலைகளை சுற்றிலும் வைத்து நடுவில் ஒரு தேங்காயை நிரப்பி கும்பம் போல தயார் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: இல்லற வாழ்க்கை செழிக்க அருளும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
இந்த வழிபாட்டில் சரஸ்வதி தேவிக்குரிய மலரான தாமரை மலரை வைக்க வேண்டும். மேலும் உங்களால் முடிந்த உணவை நைவேத்தியமாக படைக்கலாம். முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் சரஸ்வதி தேவிக்கு தீப,தூப ஆராதனைகள் காட்ட வேண்டும். அப்போது அவளுக்குரிய மந்திரங்கள், பாடல்களை உச்சரிக்கலாம். மறுநாள் விஜயதசமி நாளில் நல்ல நேரம் பார்த்து கற்கண்டு பால் படைத்து ஏடு பிரிக்கும் நிகழ்வை செய்ய வேண்டும்.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின்பால் இக்கட்டுரை தகவல்கள் உள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)