புரட்டாசி சனிக்கிழமை.. பெருமாளுக்கு தளிகை உணவு இடும் முறை!
புரட்டாசி சனிக்கிழமை என்பது விஷ்ணு பகவானுக்குரிய நாளாகும். இந்நாளில் நாம் வீட்டிலும், கோயிலுக்கு சென்றும் வழிபாடும் மேற்கொள்ளலாம். குறிப்பாக வீட்டில் தளிகை படையலிடும் வழக்கம் உள்ளது. விரதம் இருப்பவர்களும், இல்லாதவர்களும் பெருமாளுக்குரிய உணவுகளைப் படைத்து வழிபாடுகளை மேற்கொள்ளலாம். அதுகுறித்த தகவல்களைக் காணலாம்.

புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே அது ஆன்மிக மாதம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் வைணவ சமயத்தாரின் முதன்மை கடவுளான விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பலருக்கும் பெருமாள் கூறிய சனிக்கிழமை விரதம் தான் நினைவுக்கு வரும். புரட்டாசி சனிக்கிழமை என்பது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அந்த நாளில் அனைத்து விதமான பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பொதுவாக அந்த மாதத்தில் நான்கு அல்லது ஐந்து சனிக்கிழமைகள் வரும். இதனால் அந்த மாதம் முழுவதும் விரதம் இல்லாவிட்டாலும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சனி பகவானால் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள் குறையும் என்பதும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகையிட்டு வழிபாடு செய்யப்படுகிறது. தளிகை என்றால் பெருமாளுக்குரிய உணவுகளை படையலாக சமர்ப்பிப்பதாகும். வீட்டில் நவராத்திரி கொலு வைத்திருந்தால் புரட்டாசி மாதத்தில் முதல் அல்லது நான்காவது சனிக்கிழமைகளில் தளிகையிட்டு வழிபடலாம். அதே சமயம் கொலு வைக்காதவர்களாக இருந்தால் வாய்ப்பு எந்த சனிக்கிழமை கிடைக்கிறதோ அன்றைய தினம் தளிகையிட்டு வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
Also Read: பெருமாள் கோயிலில் நந்தி சிலை.. இந்த கோயிலின் சிறப்பு தெரியுமா?
தளிகை வழிபாட்டு முறை
அப்படியாக சனிக்கிழமை நாளில் பகல் 12:30 மணி முதல் 1.30 மணி வரையிலான நேரத்தில் தளிகையிட்டு பெருமாளை வழிபட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது வாழையிலை விரித்து அதில் சர்க்கரை பொங்கல், நெல்லிக்காய் சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், பாயாசம், சுண்டல் ஆகியவற்றில் எது முடிகிறதோ அதனை படைத்து வழிபடலாம். சிலர் சாம்பார், பொரியல், கூட்டு, அப்பளம், பாயாசம், வடை என்ற வகையில் சமைத்து படையலிடுவார்கள். அப்படியும் மேற்கொள்ளலாம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடுகளில் ஈடுபடும்போது பெருமாள் குறைய மந்திரங்கள் பாடல்கள் ஆகியவற்றை உச்சரிக்கலாம். விரதம் இருப்பவர்கள் மட்டுமின்றி இன்றைய நாளில் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் கூட இந்த தளிகை வழிபாட்டை நடத்தலாம். அது முடிந்ததும் அதில் படையல் இடப்பட்ட உணவுகளை குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
Also Read:சிவன், பெருமாள் இணைந்த உருவம்.. சங்கரநாராயணர் கோயில் சிறப்புகள்!
மேலும் இந்நாளில் தளிகை உணவுகளை அன்னதானமாக அளித்தால் அது மிகப்பெரிய புண்ணியமாக பார்க்கப்படுகிறது. மாலையில் கண்டிப்பாக அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் கோயில்களில் நடைபெறும் கருட சேவையில் முடிந்தவர்கள் பங்கேற்கலாம்.