தொடங்கியாச்சு நவராத்திரி.. விரதம் இருக்க வேண்டியவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்!
Navratri 2025: 2025 ஆம் ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் கோபம், பொய், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் பால், பழங்களை உண்ணலாம்.

இந்து மதத்தில் நவராத்திரி என்பது அதி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாகும். 2025 ஆம் ஆண்டு, நவராத்திரி பண்டிகை இன்று (செப்டம்பர் 22) தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களிலும், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. பக்தர்கள் இந்த காலக்கட்டத்தில் துர்க்கையின் ஆசிக்காக விரதம் இருப்பார்கள். விரதத்தின் முழுப் பலனைப் பெற, சில விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 9 நாட்களில் ஒவ்வொரு மூன்று நாட்களும் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகியோருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே, நவராத்திரி விரதத்தின் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒருவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
விரதம் இருப்பவர்களுக்கான விதிகள்
நவராத்திரி விரதம் இருக்கும் நபர்கள் எப்போதும் கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில், மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசவோ அல்லது பொய் சொல்லவோ கூடாது. விரதம் இருப்பவர்கள் இந்த காலக்கட்டத்தில் மெத்தை, தலையணை வைத்து தூங்கக்கூடாது. பயன்படுத்தும் துண்டு, வேட்டிகளை பயன்படுத்த வேண்டும். பொதுவாக, சில பக்தர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். இவ்வாறு விரதம் இருப்பவர்கள் இடையில் பழங்களைச் சாப்பிடக்கூடாது.
இதையும் படிங்க: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
இருப்பினும், உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர்கள் பால், பழம் உண்டு விரதம் தொடரலாம். அதேசமயம் நவராத்திரியின் போது ஏதேனும் பணி அல்லது முக்கியமான நோக்கத்திற்காக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், விரதம் இருக்க வேண்டாம். ஏனெனில் இந்த நேரத்தில் விரத விதிகளைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம்.
கடுமையான உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது முடியாவிட்டால் நடுவில் விரதத்தை முடித்துவிடலாம் என்று நினைப்பவர்கள் நவராத்திரியின் போது விரதம் இருக்கக்கூடாது. விரதம் இருப்பவர்கள் வீட்டில் உள்ளவர்கள், அவர்களுக்கு இணக்கமாக நடக்க வேண்டும். அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் தங்கள் உணவில் வழக்கமான தூள் உப்பைப் பயன்படுத்தக்கூடாது. இது நோன்பை முறிக்கும் என நம்பப்படுகிறது. கல் உப்பு மட்டுமே பயன்படுத்தவும்.
மனதை அலைபாய விடக்கூடாது. தனது மனதைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தனது இஷ்ட தெய்வத்தை தியானிக்க வேண்டும். இந்த நேரத்தில், ஒருவர் மன்னிப்பு, கருணை, தாராள மனப்பான்மை மற்றும் உற்சாகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏழாவது, எட்டாவது அல்லது ஒன்பதாவது நாளில் விரதம் முடிக்கும்போது ஒன்பது கன்னிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!
தினமும் காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபடலாம். அதேபோல் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வணங்கி, ஆரத்தி எடுக்க வேண்டும். துர்கா தேவியின் விருப்பமான உணவை ஒவ்வொரு நாளும் பிரசாதமாக வைத்து வழிபாடை மேற்கொள்ளவும்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)