Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவனுக்குரிய வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை.. இந்த பெருமாள் கோயில் தெரியுமா?

Famous Perumal Temple in Tirupur: சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மகாவிஷ்ணு காட்சி அளித்ததால் இந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயிலில் கல்யாண வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். சைவ வைணவ இணக்கத்தின் அடையாளமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

சிவனுக்குரிய வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை.. இந்த பெருமாள் கோயில் தெரியுமா?
கல்யாண வரதராஜர்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 23 Sep 2025 10:51 AM IST

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம் என அனைவரும் அறிவோம். அத்தகைய பெருமாள் பல்வேறு பெயர்களில் அவதாரங்களில் பல்வேறு ஊர்களில் சிறியது முதல் பெரியது வரையிலான கோயில் கொண்டிருக்கிறார். அந்த பெருமாளுக்குரிய பெயர்களில் வரதராஜர் என்பதும் ஒன்றாகும். அப்படி என்றால் வரங்கள் அல்லது நன்மைகளை நமக்கு அளிப்பவர் என்பது அர்த்தமாகும் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தை குறிக்கும் வகையில் இந்த பெயர் சொல்லப்படுகிறது. நாம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்கள் பற்றி அறிந்து வருகிறோம் அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டம் கொழுமம் என்ற ஊரில் உள்ள கல்யாண வரதராஜர் கோயில் பற்றி காணலாம்.

வணிகர்கள் கூட்டமாக வியாபாரம் செய்ததால் இந்த ஊர் குழுமூர் என அழைக்கப்பட்டு பின்னாளில் கொழுமம் என மாறியதாக சொல்லப்படுகிறது. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இந்த பெருமாள் கோயில் ஆனது தினமும் காலை ஏழு மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

தற்போது கோயில் அமைந்திருக்கும் இந்த பகுதியை ஒரு காலத்தில் சோழ மன்னன் ஆட்சி செய்து வந்தான். அப்போது நாட்டின் மழை வளம் பொய்த்து நீர்நிலைகள் வற்றிப்போனது. இதனால் மக்கள் பஞ்சத்தில் வாடினர். இதனைக் கண்டு பெரும் வருத்தம் அடைந்த மன்னன் நாட்டில் அளவில்லாது மழை பெய்ய வேண்டி மக்கள் வாழ்வில் சிறந்து விளங்க அருளும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டார்.

அவரது வேண்டுகோளை ஏற்று காட்சி கொடுத்த விஷ்ணு பகவான் மலைவளம் அருள நாடு செழித்தது. மக்கள் நன்மை பெற அருளிய மகா விஷ்ணுவிற்கு அந்த மன்னர் இந்த இடத்தில் கோயில் கட்டினார். இந்த கோயில் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே சிவாவாலயம் ஒன்று உள்ளது. சைவம் வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Also Read:  மாலையில் இதெல்லாம் செய்யாதீங்க.. லட்சுமி தேவி அருள் கிடைக்காது!

இந்த ஊர் சிவனின் திருப்பெயரான சங்கரன் மற்றும் பெருமாளின் திரு நாமமான ராமன் ஆகிய பெயர்களை இணைத்து சங்கரராமநல்லூர் என அழைக்கப்படுகிறது. சைவ பைணவ இணைப்பு தலம் என்பதால் இந்த கோயிலில் சுவாமிக்கு வலது புறம் அமர்ந்திருக்கும் வேதவல்லி தாயாருக்கு வில்வ இலைகளை கொண்டு பூஜைகள் செய்யப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் கல்யாண வரதராஜர் என்று திருநாமத்துடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பெருமாள் காட்சி கொடுக்கிறார். அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமை போர்த்திய இடத்தில் அமைந்திருக்கும் இந்த கோயிலில் முன்புறம் கருடாழ்வார் மற்றும் சுவாமியின் பாதம் உள்ளது. வலது புறத்தில் தனி சன்னதியில் தாயாரான வேதவல்லி வீற்றிருக்கிறார்.

கோயிலின் முகப்பில் வீர ஆஞ்சநேயர் வாயு மூலையில் வரதராஜரை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். மேலும் விஸ்வக்ஸேனர், நம்மாழ்வார்,இராமானுஜர், பெரியாழ்வார் ஆகியோரும் உள்ளனர். கொடிமரம் வளாகத்திற்கு வெளியே உள்ளது.

Also Read: சக்கரத்தாழ்வார் கிடைத்தால் ரொம்ப புண்ணியம்.. இந்த கோயில் தெரியுமா?

திருமண தடையால் பாதிக்கப்பட்டவர்கள் நின்ற கோலத்தில் இருக்கும் கல்யாண வரதராஜரை வணங்கினால் விரைவில் திருமண வரன் அமையும். நல்ல இல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கையாகும். மேலும் சனி தோஷம் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் இங்கு வந்து ஏராளமானோர் வேண்டிக் கொள்கிறார்கள். இந்த கோயிலில் மார்கழியில் பிரம்மோற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற பெருமாளுக்குரிய அத்தனை விஷேச தினங்களும் மிகவும் சிறப்பாக நடைபெறும். வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)