வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா…தர்ம சாலை- கருங்குழி சன்னிதியில் கொடியேற்றம்…பக்தர்கள் பரவசம்!
Vadalur Sathyagnana Sabha: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடலூர் சத்யஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசனம் நாளை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. தர்ம சாலை மற்றும் கருங்குழி சன்னிதியில் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவுக்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் தைப்பூச திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 1) நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி 4- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மகா மந்திர ஓதுதல் தொடங்கி கடந்த ஜனவரி 26 ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 27- ஆம் தேதி முதல் ஜனவரி 30- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) வரை சத்ய ஞான சபையில் திரு அருட்பா முற்றோதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை ( ஜனவரி 31) வடலூர் தர்ம சாலை மற்றும் மருதூர், கருங்குழி சன்னதி ஆகியவற்றில் காலை 7:30 மணிக்கும், ஞான சபையில் காலை 10 மணிக்கும் கொடி ஏற்றம் நடைபெற்றது.
சத்ய ஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசனம்
இதைத் தொடர்ந்து, திரு அருட்பா இன்னிசை மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. சத்ய ஞான சபையில் விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை மறுநாள் திங்கள்கிழமை ( பிப்ரவரி 2-ஆம் தேதி) காலை 5:30 மணிக்கு என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது. இதே போல, வருகிற பிப்ரவரி 3- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சித்தி வளாக திருவாரை தரிசனம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!




கோவிலில் குவிந்து வரும் பக்தர்கள்
வடலூர் தைப்பூச விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
தைப்பூச ஜோதி தரிசன விழா முன்னேற்பாடுகள்
மேலும், வள்ளலார் கோவில் பகுதியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தைப்பூசம் ஜோதி தரிசனம் மற்றும் திருஅறை தரிசன விழாவிற்கான முன்னேற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை…உயர்நீதிமன்றம் போட்ட திடீர் தடை!