பழனி முருகன் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா கொடியேற்றம்…பல்வேறு முன்னேற்பாடுகள்!
Palani Murugan Temple: தைப்பூச திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் தெரிவித்தார். இந்தக் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும், அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலில் நாளை திங்கட்கிழமை ( ஜனவரி 26) தைப்பூச திருவிழா கொடி ஏற்றம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். அதன்படி, ஒவ்வொரு நாளும் சுவாமி முருகனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 இடங்களில் நிரந்தர காவடி மண்டபங்கள்
அதன்படி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக 11 நிரந்தர காவடி மண்டபங்கள் இலவசமாக அமைக்கப்பட்டுள்ளது. ( குளியலறை, கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம்). இதனை பராமரிப்பதற்காக சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், தைப்பூசத் திருநாள் அன்று பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், தரிசன நேரத்தை குறைக்கும் வகையிலும் 3 நாள்கள் தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தைப்பூசம் 2026.. வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?.. 3 நாள் விரத முறை.. முழு விவரம்




பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்பாடு
கோவிலில் பக்தர்களின் பாதுகாப்புக்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பழனி பகுதியில் உள்ள இடும்பன் குளம், சண்முக நதி ஆகியவற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சண்முகா நதியில் இருந்த அமலை செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கோவில் பகுதிகளிலும், கோவிலிலும் தூய்மை பணியை மேற்கொள்வதற்காக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், அமர்வதற்கான இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை
தைப்பூசத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கும், நீர் நிலைகளில் புனித நீராடும் பெண்களை ஒழுங்கு படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பழனி தண்டாயுதபானி கோயிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா…கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!